
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ரன்கள் குவித்துள்ளது. இதனால், சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சண்டீகரில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாகத் தெரிவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா - விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் ஓவரிலேயே சிக்ஸருடன் ஆட்டத்தைத் தொடங்கி வெளுத்து வாங்கிய ஆர்யா 17 ரன்கள் விளாசினார். பிரப்சிம்ரன் சிங் 2 ஓவரில் ரன்கள் ஏதுமின்றி ஏமாற்றமளித்தார்.
அவருக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸருடன் 9 ரன்களிலும், ஸ்டோனிஸ் 4 ரன்களிலும், நேகல் வதேரா 9 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மற்றொரு புறம் நங்கூரம் பாய்ச்சியது போல் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரியான்ஷ் ஆர்யா, சென்னை வீரர்களில் பந்து வீச்சை சிதறடித்தார். அவருக்கு ஷஷாங் சிங்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
பிரியான்ஷ் ஆர்யா, பத்திரானா வீசிய 13 ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி தொடர்ச்சியாக விளாசி 39 பந்துகளில் ஐபிஎல் 2-வது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
42 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்த பிரியான்ஷ் ஆர்யா, சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்குப் பின்னர் வந்த ஆல்ரவுண்டர் மார்கோ யான்செனும் ஷஷாங் சிங் இருவரும் நேர்த்தியாக விளையாடி 200 ரன்களைக் கடக்க உதவினர். முடிவில், ஷஷாங் சிங் 52 ரன்களுடனும், யான்சென் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சென்னை அணித் தரப்பில், கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் சௌத்ரி, நூர் அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இதனால், சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.