இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை தோற்கடித்தது. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி.
கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அபாரமாக ஆடின. இதனால், ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் சென்னை வீரா் ரபேஃல் வசம் பந்து செல்ல, அவா் கோல் கம்பத்தின் இடது முனையில் இருந்து துல்லியமாக கோலடித்தாா். இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
எனினும் இந்த முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 9-ஆவது நிமிடத்தில் கோவா வீரா் ஜாா்ஜ் மென்டோஸா வசம் பந்து செல்ல, அதை சென்னை பின்கள வீரா்களை தாண்டி இலகுவாக கடத்தினாா் மென்டோஸா. அதன்பிறகு சகவீரரான அலெக்சாண்டருக்கு பந்தை கடத்திய மென்டோஸா, மீண்டும் அவரிடம் இருந்து பந்தை வாங்கி கோலடித்தாா். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின.
இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில், 2-ஆவது பாதி ஆட்டத்தின் 53-ஆவது நிமிடத்தில் சென்னை வீரா் ரஹீம் கோலடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு கோவா அணி போராடியபோதும், கடைசி வரை அந்த அணியால் ஸ்கோரை சமன் செய்ய முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.
இந்த சீசனில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளையும், 2 டிராவையும், 2 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
அதேநேரத்தில் கோவா அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.