மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

முதல் டெஸ்டை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 12:06 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தெ.ஆ. அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் தெ.ஆ. அணி, 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க பேட்டர்களான டீன் எல்கரும் பவுமாவும் பெரிய சவாலாக இருந்தார்கள். எல்கர் அளித்த ஒரு கேட்ச்சை பந்துவீசிய ஷமி தவறவிட்டார். 156 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் எடுத்த எல்கரை எல்பிடபிள்யூ செய்து வீழ்த்தினார் பும்ரா. 10 ஓவர்களுக்குப் பிறகு விக்கெட் விழுந்ததால் இந்திய ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள். அடுத்து வந்த டி காக் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார். அவரை அற்புதமான பந்துவீச்சினால் போல்ட் செய்தார் சிராஜ். வியான் முல்டர் 1 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளையில் தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தவிர்க்கப் போராடியது. டெம்பா பவுமா 78 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களுடனும் ஜேன்சன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற மூன்று விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 123 ரன்களும் தேவைப்பட்ட நிலையில் 2-ம் பகுதி தொடங்கியது.

மீதமுள்ள 3 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணிக்கு இரு ஓவர்களே தேவைப்பட்டன. ஜேன்சன் 13 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரபாடா, என்கிடி ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் அஸ்வின். இதனால் 2-வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 68 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகளும் அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பவுமா ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார்.

செஞ்சுரியனில் டெஸ்ட் வென்ற முதல் ஆசிய அணி என்கிற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக செஞ்சுரியனில் டெஸ்ட் வென்ற அணியும் இந்தியா தான். தென்னாப்பிரிக்காவில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இரு டெஸ்டுகளை வென்றுள்ளது. 

செஞ்சுரியனில் மகத்தான வெற்றியை அடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3 அன்று தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.