/

டெவான் கான்வே அதிரடி: ஆஸ்திரேலியாவுக்கு 201 ரன்கள் இலக்கு

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 200 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2022, 9:30 am

DIN

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 200 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (அக்டோபர் 22) விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். அதனால் தொடக்கம் முதலே ரன் ரேட் 10 ஆகவே தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் கான்வே உடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கேன் வில்லியம்ஸ். ஒருபுறம் கான்வே அதிரடியாக ஆட மறுமுனையில் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க கான்வே உடன் ஜோடி சேர்ந்தார் ஜேம்ஸ் நீஸம். 

ஜேம்ஸ் நீஸம் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த டெவான் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.