கடைசி ஒரு நாள்: வெற்றியுடன் விடைபெறும் ஆரோன் ஃபின்ச்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஒரு நாள்: வெற்றியுடன் விடைபெறும் ஆரோன் ஃபின்ச்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கஸாலிஸ் மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 131 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக மார்னஸ் 52 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. ஆலன் 35 ரன்களிலும், கான்வே 21 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். கேன் வில்லியம்சன் 27 ரன்களிலும், டாம் லாதம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் 47 ரன்களும், ஜேம்ஸ் நீசம் 36 ரன்களும், சாண்ட்னர் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணிக்கு கடைசி ஓவர்களில் வெற்றிக்குத் தேவையான ரன்கள் அதிகம் இல்லாத போதிலும் விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணி தடுமாறியது. இறுதியில் 49.5 ஓவர்களின் முடிவில் 242 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேமரான் கிரீன் மற்றும் சீன் அபாட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியினை வீழ்த்தியது. மேலும், ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த 3வது ஒரு நாள் போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஏற்கனவே அறிவித்திருந்தார். இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தனது ஒரு நாள் கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com