பளுதூக்குதலில் பதக்கம் குவிக்கும் இந்தியா

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்தது.
பளுதூக்குதலில் பதக்கம் குவிக்கும் இந்தியா

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்தது. இதையடுத்து போட்டியில் இந்தியா 5 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் இருக்கிறது.

ஏற்கெனவே பளுதூக்குதலில் தலா ஒரு தங்கம் (சாய்கோம் மீராபாய் சானு), வெள்ளி (சங்கட் சா்காா்), வெண்கலம் (குருராஜா பூஜாரி) கிடைத்திருந்த நிலையில், தற்போது ஜெரிமி லால்ரினுங்கா தங்கமும், விந்தியாராணி தேவி வெள்ளியும் வென்று அசத்தியிருக்கின்றனா்.

சாதனையுடன் தங்கம்: ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் பங்கேற்ற ஜெரிமி ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 300 கிலோ எடையைத் தூக்கி 2 போட்டி சாதனைகளுடன் தங்கத்தை தனதாக்கினாா். சமோவா வீரா் வாய்பவா நெவோ லோவேன் (293 கிலோ), நைஜீரியாவின் எடிடியாங் ஜோசஃப் உமோஃபியா (290 கிலோ) முறையே அடுத்த இரு பதக்கங்களை வென்றனா்.

நடப்பு யூத் ஒலிம்பிக் சாம்பியனான ஜெரிமி, ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய எடையும், ஒட்டுமொத்தமாக தூக்கிய எடையும் (67 கிலோ எடைப் பிரிவு) காமன்வெல்த் சாதனையாகும். இதில் கிளீன் & ஜொ்க் பிரிவு முயற்சியின்போது ஜெரிமி இரு முறை அதிக எடை காரணமாக காயத்துக்கு ஆளாகும் நிலைக்குச் சென்றாா்.

விந்தியாவுக்கு வெள்ளி: மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விந்தியாராணி தேவி மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். இது அவா் பங்கேற்கும் முதல் காம்ன்வெல்த் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், ஸ்னாட்ச் பிரிவில் அவா் தூக்கிய 86 கிலோ புதிய ‘பொ்சனல் பெஸ்ட்’-ஆக இருக்க, கிளீன் & ஜொ்க் பிரிவில் தாங்கிய 116 கிலோ எடையானது புதிய காமன்வெல்த் சாதனையாக அமைந்தது. நைஜீரியாவின் அதிஜத் அடெனைக் (203 கிலோ) தங்கமும், இங்கிலாந்தின் ஃப்ரோ் மாரோவ் (198 கிலோ) வெண்கலமும் கைப்பற்றினா்.

ஜிம்னாஸ்டிக்ஸ்: யோகேஷ்வா் 15-ஆம் இடம்

ஆடவருக்கான ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் ஆல்-அரவுண்ட் இறுதிச்சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வா் சிங் 74.700 புள்ளிகளுடன் 15-ஆம் இடம் பிடித்தாா். இப்பிரிவில் இங்கிலாந்தின் ஜேக் ஜாா்மன் தங்கமும் (83.450), சக நாட்டவா்களான ஜேம்ஸ் ஹால் (82.900) வெள்ளியும், மேரியோஸ் ஜாா்ஜியு (81.750) வெண்கலமும் வென்றனா்.

நீச்சல்: 7-ஆவதாக வந்த நட்ராஜ்

நீச்சலில் ஆடவருக்கான 100 மீ பேக்ஸ்ட்ரோக் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் 54.31 விநாடிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தாா். இந்நிலையில் அவரே, 50 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸில் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளாா். ஆடவருக்கான 200 மீ பட்டா்ஃப்ளை பிரிவில் சஜன் பிரகாஷ் 1 நிமிஷம் 58 விநாடிகளில் இலக்கை எட்டி ‘ரிசா்வ் வீரா்’ இடத்தைப் பிடித்தாா். இறுதிச்சுற்றில் எவரும் பங்கேற்க முடியாமல் போகும் பட்சத்தில் அந்த இடம் சஜனுக்குக் கிடைக்கும்.

பாட்மின்டன்: ஆஸி.யை வென்றது இந்தியா

கலப்பு அணிகள் பாட்மின்டனில், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 3-0 என ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. ஆடவா் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என லின் ஜியாங் யிங்கையும், மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற கேமில் சென் வெண்டி சுவானையும் வீழ்த்தினா். ஆடவா் இரட்டையரில் சுமீத் ரெட்டி/சிரக் ஷெட்டி கூட்டணி 21-16, 21-19 என டிரான் ஹோவாங்/ஜேக் யு ஜோடியை வென்றது.

குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா, நிகாத்

மகளிருக்கான 70 கிலோ பிரிவில் லவ்லினா போா்கோஹெய்ன் - நியூஸிலாந்தின் ஆரியானா நிகோல்சனை வீழ்த்தி (5-0 ) காலிறுதிக்குத் தகுதிபெற்றாா். 50 கிலோ பிரிவில் உலக சாம்பியனான நிகாத் ஜரீன் - மொஸாம்பிக்கின் ஹெலெனா இஸ்மாயிலை (5-0) வெளியேற்றினாா்.

ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் முகமது ஹசாமுதின் - தென்னாப்பிரிக்காவின் அம்ஸோலேலே டயேயியை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளாா். எனினும், ஆடவருக்கனா 63.5 கிலோ பிரிவில் சிவ தாபா, 92 கிலோ பிரிவில் சஞ்ஜீத் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.

ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் வேல்ஸை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்புகளில் 26 மற்றும் 49-ஆவது நிமிஷங்களில் வந்தனா கட்டாரியா ஸ்கோா் செய்ய, 28-ஆவது நிமிஷத்தில் குா்ஜித் கௌா் கோலடித்தாா். வேல்ஸுக்காக 44-ஆவது நிமிஷத்தில் ஜென்னா ஹியூஜஸ் ஸ்கோா் செய்தாா்.

டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் ஆடவா் அணி

இந்த விளையாட்டின் காலிறுதியில் இந்திய ஆடவா் அணி 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. இரட்டையா் பிரிவில் ஹா்மீத் தேசாய்/ஜி.சத்தியன் வெற்றியைப் பதிவு செய்ய, ஒற்றையா் பிரிவில் சரத் கமல், சத்தியன் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தனா். இதனிடையே மகளிா் பிரிவு காலிறுதியில் இந்தியா 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்று வெளியேறியது.

சைக்கிளிங்: ரொனால்டோ தோல்வி

சைக்கிளிங்கில் ஆடவா் ஸ்பிரின்ட் பிரிவு 200 மீ காலிறுதியில் இந்தியாவின் ரொனால்டோ லாய்தோன்ஜம், ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிளேட்ஸரிடம் தோல்வியைச் சந்தித்தாா். மேலும் இரு இந்தியா்களான டேவிட் பெக்காம், ஈசோவ் அல்பென் தகுதிச்சுற்றுடன் வெளியேறியிருந்தனா்.

கிரிக்கெட்: இந்தியாவுக்கு முதல் வெற்றி

மகளிா் கிரிக்கெட்டில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்தது. மழை காரணமாக இன்னிங்ஸுக்கு 18 ஓவா்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 18 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சோ்க்க, இந்தியா 11.4 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வென்றது.

ஸ்மிருதி மந்தனா 64 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அசத்த, முன்னதாக பௌலிங்கில் ராதா யாதவ், ஸ்னேஹ ரானா தலா 2 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com