இந்தியாவுடன் அரையிறுதியில் மோதப்போவது யார்?

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுடன் அரையிறுதி ஆட்டத்தில் மோத மூன்று அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.
இந்தியாவுடன் அரையிறுதியில் மோதப்போவது யார்?

ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டின் உச்சமாகக் கருதப்படும் உலகக் கோப்பைத் தொடர் இந்த முறை சிறப்பான தொடராக மாறியிருக்கிறது. காரணம், எந்த அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாதபடியே நடந்து முடிந்த ஆட்டங்கள் இருக்கின்றன. முக்கியமாக, சிறிய அணியாகக் கருதப்பட்ட ஆஃப்கானிஸ்தான் பெரிய அணிகளுடன் இறுதிவரை போராடும் தகுதியை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த பரபரப்புகளால் கிரிக்கெட் ரசிகர்களிடையே 2023 உலகக் கோப்பை எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. 

இந்தத் தொடரில் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் (16 புள்ளிகள்) உள்ளது. அடுத்தடுத்தாக தென்னாப்பிரிக்கா (12), ஆஸ்திரேலியா (12) அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் கடைசியாக அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் குறைந்த புள்ளிகளை வைத்திருப்பதால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டன. 

இந்தியாவுக்கு அரையிறுதி யாருடன்?

புள்ளிப்பட்டியலில் 4, 5, 6 ஆம் இடங்களில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளே உள்ளன. ஆனால், இந்த மூன்று அணிகளும் 8 புள்ளிகளையே பெற்றுள்ளதால் ரன் ரேட் அடிப்படையிலேயே இடங்களைப் பிடித்துள்ளனர். இந்த மூன்று அணிகளுக்கும் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளன. (நியூசி - இலங்கை, பாக். - இங்கிலாந்து, ஆஃப்கன் - தென்.ஆ.) ஆனால், இந்த அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன.

 _ நாளை (நவ.9) நடைபெறும் நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆட்டத்தில் நியூசி. வென்றால் சனிக்கிழமை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றாலோ, தோற்றாலோ அல்லது வெற்றி பெற்றும் நியூசிலாந்தை விட குறைவான ரன் ரேட்டை வைத்திருந்தால்  அரையுறுதிக்குள் நியூசி. நுழையும். ஒருவேளை, தென்னாப்பிரிக்காவை ஆப்கன் வென்றாலும், நியூசிலாந்தை விட அதிக ரன் ரேட்களை பெறுவதற்கான வாய்ப்பு குறைவு.

_ இரண்டாவது வாய்ப்பாக, நாளை நியூசி. அணியை இலங்கை வென்றால், பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தினால் தெ.ஆ.உடனான ஆட்டத்தில் ஆப்கன் தோற்றால் புள்ளிகள் அடிப்படையில் பாக். அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். (ஆப்கன் தெ.ஆ.வை வென்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கும் வாய்ப்பு அதிகம்)

_ நியூசிலாந்தும் பாகிஸ்தானும் தங்கள் ஆட்டங்களில் தோல்வியடைந்து தெ.ஆ.க்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கன் வென்றால் 10 புள்ளிகளுடன் அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும். 

_ மூன்று அணிகளும் தங்களுக்கு எதிரான போட்டிகளில் தோற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

சுவாரஸ்யமாக, இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கு நடந்த நியூசி, பாக் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு  ‘விதி’யால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இம்முறையும் மழை பெய்யவே 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதால், ஒருவேளை நாளைய ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டால் இலங்கைக்கும் நியூசிக்கும்  தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது, நியூசிலாந்து 9 புள்ளிகளைப் பெறும். பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றாலே போதும் அரையிறுதிக்குள் சென்றுவிடும்!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி 4 ஆம் இடத்தில் உள்ள அணியுடன் அரையிறுதியில் மோதும் என்பதால் இந்தியாவுக்கான அணி எது என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எது எப்படியோ, அடுத்தடுத்த போட்டிகள் இந்தத் தொடருக்கான திருப்பங்களாக அமைய உள்ளன. 

ஆஸி.க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஃப்கன் அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேக்ஸ்வெல்லின் அதிரடி இரட்டைச் சதத்தால் முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. ஆப்கன் மட்டும் வென்றிருந்தால், மற்ற அணிகளுக்கு ரன்ரேட் மட்டுமே அரையிறுதிக்கான ஒரே தேர்வாக இருந்திருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com