ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

ஐபிஎல் டிக்கெட் வாங்க ஆன்லைனில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டிபோட்டதால் விற்பனை தளம் முடங்கியது.
ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை தளத்தில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள், டிக்கெட் விற்றுத் தீர்ந்ததால் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையே 22-ஆம் தேதி தொடங்கவுள்ள அனல் பறக்கும் முதல் போட்டியை நேரில் காண, இரு அணி ரசிகர்களும், அதிலும் குறிப்பாக சென்னை அணியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னையில் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளுக்குமான டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் மட்டுமே பெற முடியும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, ஆன்லைன் முறையில் நேற்று(மார்ச் 18) நடைபெற்றது.

பேடிஎம் , இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும், இணையதளத்தில் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் விற்கப்படும் எனவும் அறிவிப்பப்பட்டிருந்தது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700, முதல் அதிகபட்சமாக ரூ,7,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!
சென்னை-ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் விற்பனைத் தளம் முடங்கியது

எதிர்பார்த்ததை போல், விற்பனை தளத்தில் டிக்கெட் வாங்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முண்டியடித்ததால் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தளம் முடங்கியது. காலை 9.30 மணி முதல் விற்பனை தளத்தில் டிக்கெட் வாங்க காத்திருந்த பெரும்பாலான பயனர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்கள் பலர், 7 மணி நேரம் வரை காத்திருந்தும் பயனில்லை.

விற்பனை தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயனர்கள் தவித்தனர். அதிலும் குறிப்பாக எந்த இருக்கை வேண்டுமென்ற பக்கத்தை தாண்டி, அடுத்தகட்டமாக பணம் செலுத்த முடியாமல் விற்பனை தளம் முடங்கியதாக பயனர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

33 நிமிடங்களில் டிக்கெட் விற்பனை மீண்டும் தொடங்குமென, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டதை நம்பி காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் ’டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன’ என்ற செய்தியை தான் விற்பனை தளத்தில் பார்க்க முடிந்ததாக மனம் குமுறினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாய் அமைந்தது. விற்பனை தளம் முடங்கியதால், ஐபிஎல் டிக்கெட் பெற முடியாமல் தவித்த அஸ்வின், ”முதல் போட்டியைக் காண உதவி செய்யுங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஏறத்தாழ 38,000 பார்வையாளர்கள் மட்டுமே நேரில் போட்டியை கண்டுகளிக்க முடியும். அப்படியிருக்கையில், ஐபிஎல் டிக்கெட் வாங்க, இணையதளம் வாயிலாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டிபோட்டதால், ஐபிஎல் டிக்கெட் விற்பனை தளம் முடங்கியதாக சொல்லப்படுகிறது.

பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், உள்ளூர் அணிகள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகியோருக்கு 30 சதவிகித டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 70 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே பயனர்களுக்காக விற்பனை தளத்தில் இருந்தததும் டிக்கெட்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் விற்பனையானதற்கும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனையாவதை தடுக்கும் நடவடிக்கையாக ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கினாலும், டிக்கெட்டுகளை வாங்கிய பலர், அவற்றை 5 மடங்கு வரை கூடுதல் விலைக்கு விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ.. அடுத்த போட்டிக்காவது டிக்கெட் கிடைக்குமா அல்லது மீண்டும் ஏமாற்றமே மிஞ்சுமா என்பதே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ஒரே கேள்வியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com