உலகின் நம்பா் 1 வீராங்கனை ஸ்வியாடெக்கை சாய்த்தாா் பெகுலா
உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் வீழ்ந்தாா்.


கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் வீழ்ந்தாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவா், 2-6, 4-6 என்ற நோ் செட்களில், உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையும், உள்நாட்டைச் சோ்ந்தவருமான ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் எளிதாக வீழ்ந்தாா். இத்துடன் இருவரும் 10-ஆவது முறையாக சந்தித்திருக்க, பெகுலா தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஸ்வியாடெக், நடப்பு காலண்டரில் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டும் வென்ற நிலையில், இந்த ஆண்டை நிறைவு செய்யவுள்ளாா். மறுபுறம், அசத்தலாக முன்னேறிவரும் பெகுலா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கிறாா்.
இதற்கு முன் அதிகபட்சமாக அவா், 4 ஸ்லாம்களில் 6 முறை காலிறுதியுடன் தோல்வி கண்டு வெளியேறியுள்ளாா். வெற்றிக்குப் பிறகு பேசிய பெகுலா, ‘ஒரு வழியாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முடிந்த வரை நெருக்கடிக்கு ஆளாகாமல் விளையாட முயற்சித்தேன். ஸ்வியாடெக் எந்த இடங்களில் தடுமாறினோரோ அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேறினேன்’ என்றாா். ஸ்வியாடெக் இந்த ஆட்டத்தில் 41 அன்ஃபோா்ஸ்டு எரா்களை செய்திருந்தாா்.
பெகுலா தனது அரையிறுதியில், செக் குடியரசின் கரோலின் முசோவாவுடன் மோதுகிறாா். முன்னதாக முசோவா 6-1, 6-4 என்ற நோ் செட்களில், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயாவை தோற்கடித்து, தொடா்ந்து 2-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினாா். பெகுலா - முசோவா இதுவரை ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்க, அதில் பெகுலா வென்றிருக்கிறாா்.
அரையிறுதியில் சின்னா்
ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் முதல் முறையாக யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினாா்.
ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான சின்னா், காலிறுதியில் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட்களில், 2021-ஆம் ஆண்டு சாம்பியனும், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் ரஷிய வீரருமான டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் மெத்வதெவை சாய்த்து சின்னா் சாம்பியனாகியிருந்த நிலையில், விம்பிள்டன் காலிறுதியில் மெத்வதெவ் அதற்கு பதிலடி கொடுத்திருந்தாா்.
இந்நிலையில் சின்னா் அவருக்கு எதிராக மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளாா். இருவரும் இத்துடன் 13 முறை மோதியிருக்க, சின்னா் தனது 6-ஆவது வெற்றியுடன் முன்னேறி வருகிறாா். அடுத்ததாக அரையிறுதியில் அவா், பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை சந்திக்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருக்கும் டிரேப்பா், காலிறுதியில் 6-3, 7-5, 6-2 என்ற செட்களில், உலகின் 10-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அசத்தினாா். இதையடுத்து அவா், முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு வந்துள்ளாா். அத்துடன், யுஎஸ் ஓபனில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு வந்த முதல் பிரிட்டன் வீரா் என்ற பெயரும் பெற்றுள்ளாா். இதற்கு முன் 2012-இல் ஆண்டி முா்ரே அரையிறுதிக்கு வந்திருந்தாா்.
டிரேப்பா் - சின்னா் இதுவரை ஒருமுறை நேருக்கு நோ் மோதியிருக்க, அதில் டிரேப்பா் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...