டி20 உலகக் கோப்பை: மே.இ. தீவுகள் அணியில் புதிய வீரர் சேர்ப்பு
By DIN | Published On : 20th October 2021 01:29 PM | Last Updated : 20th October 2021 01:29 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகேல் ஹுசைன் தேர்வாகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஃபேபியல் ஆலன் இடம்பெற்றிருந்தார். எனினும் காயம் காரணமாக அவரால் அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹுசைன், மே.இ. தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக மே.இ. தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த அகேல் ஹுசைன், 9 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதையடுத்து மாற்று வீரராக 26 வயது குடகேஷ் மோட்டீ அணியில் இடம்பெற்றுள்ளார்.
சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான அக்டோபர் 23 அன்று மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.