கணக்குகள் ஆரம்பம்: மே.இ. தீவுகள் அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சுவாரசியத்துக்கு மே.இ. தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டியது அவசியம்.
கணக்குகள் ஆரம்பம்: மே.இ. தீவுகள் அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

வங்கதேச அணி, மூன்று தோல்விகளை எதிர்கொண்டுள்ளதால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாது. இதற்கு முன்பு இரு தோல்விகளை அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த ஆட்டத்தை வென்றதன் மூலம் அரையிறுதிக்கான போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறது. 

குரூப் 1 பிரிவில் வங்கதேசத்தைத் தவிர மற்ற அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் என 5 அணிகளும் அரையிறுதிக்கான போட்டியில் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் இதுவரை ஒரு தோல்வியும் அடையாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 4 புள்ளிகளுடன் முதலிடங்களில் உள்ளன. 

சரி, வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியால் நெட் ரன்ரேட் உதவியின்றி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா? அதற்குச் சில கணக்குகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம். 

* முதலில் மீதமுள்ள இரு ஆட்டங்களையும் மே.இ. தீவுகள் அணி வெல்ல வேண்டும். அதாவது இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக. இதன்மூலம் 6 புள்ளிகள் கிடைக்கும்.

* மே.இ. தீவுகள் அணி இங்கிலாந்தின் வெற்றிகளை எதிர்பார்க்க வேண்டும். 4 புள்ளிகளைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெல்லவேண்டும். அதில் ஆஸ்திரேலியாவைக் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான இரு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் கூட போதும்.

* மே.இ. தீவுகள் அணிக்குப் பெரிய எதிரியே ஆஸ்திரேலியா தான். அதனால் அந்த அணி பெறுகிற ஒவ்வொரு தோல்வியும் மே.இ. தீவுகள் அணிக்கு உதவும். மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா தோற்கவேண்டும். அந்த அணி ஏற்கெனவே 4 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதற்கு மேலும் புள்ளிகளைச் சேர்த்தால் மே.இ. தீவுகள் அணிக்கு ஆபத்து. இது நடக்குமா எனத் தெரியாது. நடந்தால் மே.இ. தீவுகள் அணிக்கு நல்லது.

* இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் இரு புள்ளிகளைக் கொண்டுள்ளன. இரு அணிகளுக்கும் மீதம் தலா இரு ஆட்டங்கள் உள்ளன. அதில் இரண்டு அணிகளும் ஒரு வெற்றி மட்டுமே பெறவேண்டும். இன்று இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இங்கிலாந்திடம் தோற்றால் தான் மே.இ. தீவுகள் அணிக்கு நல்லது. 

* இது கஷ்டம் தான். ஆனால் வங்கதேசம் கட்டாயமாக ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க வேண்டும். அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிடம் வங்கதேசம் தோற்றால் பிறகு தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திடம் தோற்கவேண்டும். அதாவது இங்கிலாந்தைத் தவிர வேறு எந்த அணியும் 4 புள்ளிகளைத் தாண்டிச் செல்லக்கூடாது. 

இவையெல்லாம் அச்சுபிசகாமல் அப்படியே நடந்தால், மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சுவாரசியத்துக்கு மே.இ. தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டியது அவசியம். பார்க்கலாம், நினைத்ததெல்லாம் நடக்கிறதா என்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com