விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம்: ஆராய உயர் நிலைக் குழு நியமனம்: ஜெயலலிதா

சம்பா பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மேலும் நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆராய உயர் நிலைக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம்: ஆராய உயர் நிலைக் குழு நியமனம்: ஜெயலலிதா
Updated on
2 min read

சம்பா பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மேலும் நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆராய உயர் நிலைக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஏழு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட மறுப்பதோடு மட்டுமல்லாது, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு மறுத்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் நடவடிக்கைகளும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவினை தெரிவிப்பதுபோலவே அமைந்துள்ளன.

பாதிக்கும் நிலை: திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசின் சுயநலப் போக்கையும், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கையும் எதிர்த்து காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் முறையிடப்பட்டது.

சம்பா பயிரைக் காப்பாற்ற தேவையான 18 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை கடந்த 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகம் தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீர் குறித்து காவிரி கண்காணிப்புக் குழு வரும் 11-ம் தேதிக்குள் கூடி முடிவெடுக்க வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

11 லட்சம் ஏக்கர் பயிர்கள்: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாகவும், இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டதால் 11 லட்சம் ஏக்கர் பரப்பில் காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களின் கடைமடைப் பகுதிகளில் உள்ள பயிர்கள், தண்ணீர் இல்லாமல் பாதிப்படையும் நிலையில் உள்ளன.

டெல்டா விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழும் ஏக்கருக்கு ரூ.13 ஆயிரத்து 692 வரை நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மேலும் அளிக்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆராய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் யார் யார்? இந்தக் குழுவில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர் குழுவின் உறுப்பினர் செயலாளராகவும், தொடர்புடைய செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களை அலுவல் உறுப்பினர்களாகவும் கொண்டு உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுக்குப் பரிந்துரை: உயர் நிலைக் குழுவானது, வறட்சி நிலைமை மற்றும்

பயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து எந்தெந்த வட்டங்கள், ஒன்றியங்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும்.

இதன் அடிப்படையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் நியாயமான முறையல் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தேசிய ஊரக திட்டத்தில் வேலை

பயிரிழப்பால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், பயிரிழப்பால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்பின்மையும் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், விவசாயிகள் தண்ணீரினை திறம்பட சேமித்து கையாளும் வண்ணமும், நீர் நிலைகளைத் தூர்வாருதல், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை சுத்தம் செய்தல் என பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதற்கான நடவடிக்கைகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் சிறப்புப் பணிகளாக எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com