கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பிரசவத்தின்போது சிறுநீர் பையில் காயம்: இரு மருத்துவர்கள் ரூ.65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பிரசவத்தின்போது, பெண்ணின் சிறுநீர்ப் பையில் காயம் ஏற்படுத்தி கவனக்குறைவாக செயல்பட்ட இரு மருத்துவர்கள் ரூ. 65,314 இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2016, 10:09 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பிரசவத்தின்போது, பெண்ணின் சிறுநீர்ப் பையில் காயம் ஏற்படுத்தி கவனக்குறைவாக செயல்பட்ட இரு மருத்துவர்கள் ரூ. 65,314 இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தூர் வட்டம், பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். கர்ப்பம் அடைந்த இவர் ஆரம்பம் முதலே சாத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ராணி மணிவண்ணனிடம் ஆலோசனை பெற்று வந்துள்ளார். 4.9.2004-ம் தேதி ரம்ஜான் பேகத்திற்கு பிரசவ வலி  ஏற்பட்டதால், பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்று யூகித்து உறவினர்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்தவர் ராணி மணிவண்ணன், தனக்குச் சொந்தமான சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். அங்கு ஆரம்பத்தில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளார்கள்.

5-ம் தேதி (மறுநாள்) பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை ஆயுதம் (Forceps) பயன்படுத்தி எடுத்துள்ளார்கள். மேலும் கவனக் குறைவாக ஆயுதம் பயன்படுத்தி எடுத்ததால் ரம்ஜான் பேகத்தின் சிறுநர்ப் பையில் கீரல் ஏற்பட்டு, சிறுநீர் தானாக வெளியேறிக் கொண்டிருந்துள்ளது.

ரம்ஜான் பேகத்தின் சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட கீரலை சரி செய்வதற்காக மருத்துவர் ராணி மணிவண்ணன், மதுரை செனாய் நகர், கக்கன் தெருவில் தனியார் மருத்துவமனை வைத்துள்ள டாக்டர் ஏ.எம்.சையது இப்ராஹிம் என்பவரை உடனடியாக அழைத்து, சிறுநீர்ப் பையில் அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டுள்ளார். இருந்தபோதும் சிறுநீர் தானாகவே வெளியேறிக் கொண்டிருந்துள்ளது.

இதனையடுத்து சிறுநீர் வெளியேற குழாய் மூலம் பைகள் பொருத்தப்பட்டன. சிறுநீர் தானாக வெளியேறுவது எப்போது நிற்கும் என்று மருத்துவரிடம் கேட்டபோது 10 நாளில் நின்று விடும் என்று கூறியுள்ளார்கள். அன்றே சிகிச்சைக்காக ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளார்கள். ராணி மணிவண்ணனின் மருத்துவமனையிலிருந்து 15 நாட்கள் கழித்து ரம்ஜான் பேகம் சிகிச்சை முடித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்போது ரூ.6 ஆயிரம் கட்டணம் பெற்றுள்ளார்கள்.

அதன் பின்னரும் சிறுநீர் தானாகவே வெளியேறிக் கொண்டிருந்தது. இது குறித்து டாக்டர் ராணி மணிவண்ணனிடம் கேட்டபோது, மதுரையில் டாக்டர் ஏ.எம்.சையது இப்பராஹிம் நடத்தும் மருத்துவமனையில் போய் சேர்ந்து நிவிர்த்தி செய்து கொள்ளும் படி அறிவுரை கூறியுள்ளார். அதன்படி அந்த மருத்துவமனையில் ரம்ஜான் பேகம் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ள நிலையில் எந்த சிகிச்சையும் அளிக்காமல், மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கி, கடிதமும் கொடுத்துள்ளார். இவர் தங்கியிருந்தற்காக ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளார்.

மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் ரம்ஜான் பேகம் சேர்ந்து, ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து சிகிச்சை முடித்து பூரண குணம் அடைந்து 23.12.2004-ல் வீடு திரும்பியுள்ளார்.

டாக்டர்கள் ராணி மணிவண்ணன், ஏ.எம்.சையது இப்ராஹிம் ஆகியோரிடம் தனக்கு மேற்கொண்ட சிகிச்சை குறித்த குறிப்புகளைக் கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டார்களாம்.

இதனையடுத்து ரம்ஜான் பேகம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.

இறுதியாக அவர்கள் அளித்த தீர்ப்புரை: டாக்டர்கள் ராணி மணிவண்ணன், ஏ.எம்.சையது இப்ராஹிம் ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. மேலும் இவர்களது செயலில் சேவை குறைபாடு உள்ளது என்றும் முடிவு செய்யப்படுகிறது. இவர்களது கவனக்குறைவான செயலால், ரம்ஜான் பேகத்தின் சிறுநீர் பையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், அவருக்கு சிறுநீர் தானாக வெளியேறி உள்ளது. பின்னர் மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று அங்கு பூரண குணமடைந்துள்ளார். எனவே ரம்ஜான் பேகத்திற்கு, இரு டாக்டர்களிடமிருந்தும் நஷ்ட ஈடு கிடைக்கக் கூடியதாகும்.

மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் ரூ.40,314 செலவாகியுள்ளது. இது ரம்ஜான் பேகத்திற்கு நஷ்ட ஈடாக கிடைக்கத்தக்கது. மூன்று மாதம் இவர் அடைந்துள்ள பலத்த சிரமம், மனவேதனை, சௌகரியக் குறைவு ஆகியவற்றிற்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு கிடைக்கக் கூடியது. மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கு சென்று சென்று மேல் சிகிச்சை பெற்ற வகையில் ஏற்பட்ட போக்குவரத்து செலவு மற்ற சில்லரை செலவீனங்களுக்கு ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடு கிடைக்கக் கூடியது என்று முடிவு செய்யப்பட்டு மொத்தத்தில் ரூ.60,314 யை மனு தாக்கல் செய்த நாளிலிருந்து தொகை வசூலாகும் தேதி வரை 6 சதவீதம் வட்டியுடன் டாக்டர்கள் ராணி மணிவண்ணன், ஏ.எம்.சையது இப்ராஹிம் ஆகியோர் வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.