கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்த காரணத்தினால் சந்திரா என்ற பெண்மணி இறந்து போன கொடுமை நடந்தேறியது. அதுகுறித்து அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நான் பேசியிருக்கிறேன். மின்துறை அமைச்சரிடம், ’ஏற்கனவே நான் இந்த தொகுதியில் ஆய்வு செய்து, மேலே செல்லக்கூடிய மின் கம்பிகளை எல்லாம் பூமிக்கு அடியில் அமைத்து தரக்கூடிய வகையில், மாற்றித் தர வேண்டும்’, என நான் கோரிக்கை வைத்தேன். மின்துறை அமைச்சர், ’வருகிற மழைக் காலத்திற்குள்ளாக அதை நிறைவேற்றித் தருகிறேன்’, என்ற உறுதிமொழி தந்திருந்தார். ஆனால், அந்த உறுதிமொழி காப்பற்றப்படவில்லை. அந்த காரணத்தினால்தான் இப்பொழுது சந்திரா என்ற பெண் மரணம் அடைந்திருக்கிறார். ஆகவே, இதுகுறித்து நான் சட்டப்பேரவையில், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது, ’அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, விரைவில் அந்தப் பணிகளை நிறைவேற்றித் தருகிறேன்’, என்று மீண்டும் உறுதிமொழி தந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இறந்த சந்திராவின் குடும்பத்துக்கு மின் வாரியத்தின் சார்பாக நஷ்ட ஈடாக 2 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்தக் குடும்பத்தினர், ’அதுகூட எங்களுக்குத் தேவையில்லை, உடனடியாக மேலே செல்லக்கூடிய மின் வயர் கம்பிகளை பூமிக்குள் புதைக்கும் பணியை நிறைவேற்றினால் பொதுமக்கள் காப்பாற்றப்படுவார்கள்’, என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவர்கள் அந்த தொகையை வாங்குவதற்குக் கூட மறுத்துவிட்டார்கள். இப்பொழுது நாங்கள் அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடியவர்களை எல்லாம் சந்தித்து, திமுகவின் சார்பில், கொளத்தூர் தொகுதி சார்பில், எங்களால் முடிந்த அளவுக்கு நிதியுதவி செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, ’மின்வாரியம் தந்திருக்கக்கூடிய அந்த நிதியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள், அதை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம், அதை விட கூடுதல் நிதி பெற வேண்டும் என்றால், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அதன் மூலமாக அதிகமான நிதியைப் பெறுவதற்கான ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தருவதற்கு துணை நிற்கிறோம்’, என்று நாங்கள் அவர்களிடத்திலே உறுதிமொழியை தந்துவிட்டு வந்திருக்கிறோம்.
அதேபோல, வர்தா புயல் காலத்தில் மரங்கள் எல்லாம் விழுந்தபோது, அந்த மரங்களை எல்லாம் ஒரு திடலிலே கொண்டு போய் கொட்டி வைத்திருந்தார்கள். அது அண்மையில் தீப்பற்றி எறிந்து போயிருக்கிறது. அந்தப் பணியை பார்வையிட்டு வந்திருக்கிறோம். ஒரு இடத்தில் ட்ரான்ஸ்பார்மர் விழுந்து, அதை சரி செய்யக்கூடிய பணியை இப்போது பார்வையிட்டு வந்திருக்கிறோம். இப்படி தொகுதியில் இருக்கக்கூடிய பல பணிகளை இன்று காலையிலிருந்து நாங்கள் ஆய்வு செய்திருக்கிறோம்.
குடிநீர் தட்டுப்பாடு பல பகுதிகளில் இருப்பதாக பொதுமக்கள் எங்களிடத்தில் குறைபாடு சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் உடனே சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், ’குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது, உடனடியாக லாரிகள் மூலமாக குடிநீரை வழங்கிட வேண்டும்’, என்ற கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறோம். தொடர்ந்து, அதைக் கண்காணித்து அந்தப்பணியை மேற்கொள்வோம் என்பதையும் மக்களிடத்தில் உறுதிமொழியாக தந்துவிட்டு வந்திருக்கிறோம்.
கேள்வி: டெல்லியில் தொடர்ந்து 14-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரையிலும் மத்திய அரசு அவர்களுக்கு செவி சாய்க்கவில்லை. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இன்று காலையில் கூட அதுகுறித்து தெளிவாக அறிக்கை விடுத்திருக்கிறேன். அது முரசொலி உள்ளிட்ட பத்திரிகைகளில் வந்திருக்கிறது. உங்களைப் போன்ற ஊடகங்கள் கூட அந்த செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தம். இருந்தாலும், இப்போது கேட்கிறீர்கள். இதையாவது வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு மீண்டும் உங்களிடத்தில் சொல்லுகிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் முதல், அமைச்சர் வரை இன்றைக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தில்லியில் கடந்த இரண்டு வார காலமாக விவசாயப் பெருங்குடி மக்கள் ஒரு போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள், மரத்திலே ஏறி தற்கொலை செய்து கொள்கிற நிலையில் கூட அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், இதுவரையில் முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று, வேதனைப்பட வேண்டிய ஒன்று. எனவே, இப்பொழுதாவது அவர்கள் உடனடியாக அந்தப் பணியிலே ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியை நீங்கள் இதுவரையில் இருட்டடிப்பு செய்திருந்தாலும், இப்பொழுதாவது செய்தியை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு நீங்கள் கேட்ட காரணத்தினால் அதை சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் எப்போது பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறீர்கள்?
பதில்: இன்றைக்கு பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கூட வந்திருக்கிறது. 28 ஆம் தேதி நான் கலந்து கொள்ளக்கூடிய, கூட்டணி கட்சியில் இடம்பெற்றிருக்கக் கூடிய தலைவர்கள் எல்லாம் பங்கேற்கக்கூடிய வகையில், மாபெரும் பொதுக்கூட்டம் நாளை மாலை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து அங்கு திமுக சார்பில் பிரச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எல்லோரும் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே?
பதில்: தேர்தல் கமிஷனிடம் நாங்கள் முறையோடு, எங்களுடைய வழக்கறிஞர்கள் மூலமாக, தொண்டர்கள் மூலமாக தொடர்ந்து புகார் தந்து கொண்டிருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் மறுபடியும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இன்று கையெழுத்திடுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறதே?
பதில்: இதை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பதுக்கியுள்ளதை போலீசார் பிடிக்காமல் இருப்பதாக மதுசூதனன் புகார் கூறியிருக்கிறாரே?
பதில்: இரு தரப்பினருமே பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் தெரிவித்து வருகிறோம். காரணம், இப்போது இரு அணிகளாக அவர்கள் பிரிந்திருக்கலாம். ஆனால், ஆட்சியில் இருந்தபோது இருதரப்பினரும் சேர்ந்து கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள் தான். அப்படி கொள்ளையடித்தப் பணத்தை பதுக்கி வைத்து, இப்போது தேர்தலுக்குப் பயன்படுத்துவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கேள்வி: தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறதே?
பதில்: இந்த தொகுதியில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. சட்டப்பேரவையிலும் இதை சொல்லி இருக்கிறோம். ஆனால், இந்த ஆட்சியின் காதில் அது விழவில்லை. விவசாயிகள் இன்றைக்கு தமிழ்நாட்டில் போராடிப் பயனில்லை என்று தலைநகர் தில்லிக்கு சென்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதிமுகவை சேர்ந்த முதல்வர் அங்கு செல்லவில்லை என்பது ஒருபக்கம், சம்பந்தப்பட்ட விவசாயத்துறையின் அமைச்சர் கூட அந்தப்பக்கம் செல்லவில்லை. அவர்கள் அனைவரும் இப்போது பெரா வழக்கில் சிக்கியிருக்கக்கூடிய வேட்பாளருக்கு பிரசாரத்தில், பணம், தங்கம் பட்டுவாடா செய்வதில் ஈடுபட்டு இருக்கிறார்களே தவிர, விவசாயிகள் போராட்டம், குடிநீர் பிரச்னை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட, ஜி.கே.எம்.காலனி விளையாட்டுத் திடலில், வர்தா புயலின்போது சாய்ந்து, சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மரங்கள் தீப்பற்றி எரிந்து சேதமானதை பார்வையிட்டார். தொடர்ந்து குமரன் நகர் 3 வது தெருவில் மின் கம்பம் சரிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பூம்புகார் நகர் பகுதியில், மின் கம்பி அறுந்து விழுந்ததால் உயிரிழந்த எம். சந்திரா என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், போரூர் பைபாஸ் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது காற்றாடி நூல் கழுத்தில் அறுபட்டு உயிரிழந்த எஸ்.வி.எம். பாடசாலை பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ், கே.சி.கார்டன் பகுதியில் தாமரை குளத்தில் மூழ்கி உயிரிழந்த சரவணன் மற்றும் சக்கரபாணி தோட்டம், அகரம் பகுதியில் தண்ணீர் வாளியில் விழுந்து இறந்த ஒரு வயது குழந்தையான ரோகன் ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.