கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நானும், பன்னீர்செல்வமும் இரட்டைக்குழல் துப்பாக்கி: முதல்வர்

ஆட்சியிலும், கட்சியிலும் நானும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல செயல்படுவோம் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்

News image
தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நினைவு பரிசாக செங்கோல் வழங்கும் அதிமுக நிர்வாகிகள்.
Updated On :9 நவம்பர் 2017, 8:05 pm

DIN

ஆட்சியிலும், கட்சியிலும் நானும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல செயல்படுவோம் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். உருவப் படத்தை திறந்து வைத்தும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது: 
மக்கள் பிரச்னைகளை சொந்தப் பிரச்னையாகக் கருதி அவற்றைத் தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக, மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழக நலனுக்காக மத்திய அரசிடம் வாதிட்டு அவர்கள் பெற்று வந்த திட்டங்கள் என்ன என்பதைக் கூற முடியுமா? அவர்களுடைய ஆட்சியும், அதிகாரமும் அவர்களது குடும்பத்தை வளப்படுத்துவதற்கு பயன்பட்டனவே தவிர, மக்களுக்குப் பயன்பட வில்லை. அறிவியல் பூர்வமான மற்றும் நுணுக்கமான ஊழல்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் காட்டியவர்கள் திமுகவினர்.
இன்றைக்கு வீதிக்கு வந்து ஊழலுக்கு எதிரான போராட்டம், நடைபயணம், பேரணி, உண்ணாவிரதம் என்று வேடமிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அவர்கள் எத்தனை வேடமிட்டாலும், மக்களின் எக்ஸ்ரே கண்களுக்கு அவர்களின் உண்மை முகம் தெரிந்து விடும். அவர்களின் ஊழல்தான் மக்களின் நினைவுக்கு வரும். திமுக.வால் இனி ஒரு காலமும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.
நாங்கள் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துள்ளோம். அதனால் மக்கள் எங்களை மட்டுமே நினைவில் நிறுத்தியிருக்கிறார்கள். மக்களுக்காக இன்னும் பல நூற்றாண்டுகள் இந்த இயக்கம் பாடுபடும். எங்களுக்கு எப்போதும் தோல்வியே கிடையாது. எங்கள் சொல்வாக்கு சுத்தமாக உள்ளதால், மக்களிடையே செல்வாக்குப் பெருகி, தங்கள் நல்வாக்குகளை எங்களுக்கு அளிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு பணத்தை விரயம் செய்வதாக திமுகவினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மாநாடு போல கூடும் மக்களின் எழுச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவிழ்த்துவிடும் பொய் பிரசாரம், அரசு நலத் திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள், கோடிக்கான ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களால் பயனடையும் மக்களிடம் எடுபடாது.
ஒரே தாயின் குழந்தைகளான இரண்டு பச்சைக் கிளிகள் இருவேறு சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன. ஒரு கிளி முரடர்களால் வளர்க்கப்படுகிறது. மற்றொன்று சான்றோர்களால் வளர்க்கப்படுகிறது. முரடர்களால் வளர்க்கப்படும் கிளி எப்போதும் வெட்டு, குத்து என்றே பேசுகிறது. சான்றோர்களால் வளர்க்கப்படும் கிளி வாருங்கள், உட்காருங்கள் என்று பேசுகிறது. காரணம் அவை தினந்தோறும் காதுகளில் கேட்ட வார்த்தைகளைப் பொறுத்து அவற்றின் பேச்சுகள் அமைகின்றன. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நம் இயக்கத்தினர் நல்லவற்றை பேசவும், நல்லவற்றை செய்யவும் பயிற்சி பெறுகிறோம். 
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதாகக் கூறி அரசை விமர்சிக்கிறார். கடந்த காலத்தில் சென்னை மாநகர மேயராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றிய அவர், அப்போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?
அதிமுக தொண்டர்களின் உடலில் விசுவாசமான ரத்தம் ஓடுவதால் ஒரு தொண்டனைக் கூட இயக்கத்தில் இருந்து பிரிக்க முடியாது. இந்த இயக்கத்தை அசைக்க முடியாது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவே நாங்கள் கருதுகிறோம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நானும் கட்சியிலும் ஆட்சியிலும் இரட்டைக் குழல் துப்பாக்கி போலச் செயல்படுவோம் என்றார்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பித்துரை முன்னிலை வகித்தார். முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் புகைப்படக் கண்காட்சி மற்றும் அரசு துறைகள் சாதனை விளக்கக் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர்கள், தேனி மக்களவை உறுப்பினர் ரா. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் இரா.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் நன்றி கூறினார்.
முதல்வர் கூறிய குட்டிக் கதை

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குட்டிக்கதை ஒன்றைக் கூறினார். அவர் பேசியதாவது:
ஒரு ஊரில் சிறுவன் ஒருவன் மரத்தில் ஏறி கிளையில் அமர்ந்து கொண்டு, அந்தக் கிளையின் அடிப் பாகத்தை வெட்டிக் கொண்டிருந்தான். கிளை முறிந்தால் தானும் கீழே விழுந்து விடுவோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. சில நிமிடங்களில் கிளை முறிந்து விடும் நிலையில் இருந்தது. உயரத்தில் இருந்து விழுந்தால் அந்த சிறுவனின் உயிருக்கு ஆபத்து நேரிடும். இதை மேலோகத்தில் இருந்து இதைப் பார்த்து விட்ட பார்வதிதேவி, அந்தச் சிறுவன் தனக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பது கூட தெரியாமல் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறான். சில நிமிடங்களில் கிளை முறிந்து விடப் போகிறது. அவனை ஆபத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிவபெருமானிடம் கூறினார். அதற்கு சிவபெருமான், விழட்டும் பார்க்கலாம். பொறுமையாக இரு என்கிறார்.
உயரத்தில் இருந்து விழுந்த பிறகு என்ன செய்ய முடியும். அனைத்து உயிர்களுக்கும் தாய், தந்தையாக இருக்கும் நமக்கு அச்சிறுவனை காப்பாற்றுவது கடமையல்லவா என்று பார்வதிதேவி கூறினார். அதற்கு சிவபெருமான், அவனுக்கு ஆபத்து ஏற்படாது. கிளை ஒடிந்து கீழே விழும் போது அவன் அம்மா என்று அலறினால், நீ இங்கிருந்தபடியே அவனை தாங்கிப்பிடி. அப்பா என்று அலறினால் நான் அவனை காப்பாற்றி விடுகிறேன் என்றார்.
அந்த நொடியே கிளை ஒடிந்து விழுந்தது. அப்போது மரத்தில் இருந்து கீழே விழுந்த சிறுவன், அம்மா என்றோ, அப்பா என்றோ அழைக்கவில்லை. மாறாக, ஐயோ என்று அலறினான். அதனால் சிவபெருமான், பார்வதிதேவி இருவருமே அவனை காப்பாற்ற முயலவில்லை. அவன் கீழே விழுந்து விட்டான். அப்போது சிவபெருமான், பார்வதியிடம், பார்த்தாயா, அவன் நாக்கிற்கு நல்லதை பேச பயிற்சி கொடுக்கவில்லை. அதனால் தான் அவன் ஐயோ என்று அலறி, ஆபத்தை தேடிக் கொண்டான் என்றார். எனவே, நல்லதை பேசி பயிற்சி பெறாதவர்கள் மக்கள் மனதில் இருந்து கீழே விழுந்து விட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.