முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீரைத் தேக்கினாலும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணை பூகோள ரீதியிலும் வடிவமைப்பு ரீதியிலும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி அளவுக்கு நீரைக் குறைத்து அணையை பாதுகாக்க வேண்டுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கேரள முதல்வருக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-
ஆகஸ்ட் 15-ஆம் தேதியிட்ட தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு அணையானது வடிவமைப்பு, பூகோள ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தது. கடந்த காலங்களில் பல்வேறு நிபுணத்துவம் கொண்ட குழுவினரால் முல்லைப் பெரியாறு அணையானது பலமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் அணையானது பாதுகாப்பாக இருப்பது அறியப்பட்டுள்ளது.
அவ்வப்போது ஆய்வு-அச்சமில்லை: முல்லைப் பெரியாறு அணையின் வலிமையை அவ்வப்போது ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழுவை உச்ச நீதிமன்றமானது அமைத்துள்ளது. இந்தக் குழு கடந்த 4-ஆம் தேதியன்று கடைசியாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டதுடன், அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கினாலும் பாதுகாப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணையில் 142 அடி அளவு வரை நீரைத் தேக்கினாலும் அணையின் பாதுகாப்புக்கு எந்த அச்சமும் ஏற்படாது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான அளவில் நீரானது சுரங்கப்பாதையின் வழியாக தமிழக அரசு கொண்டு சென்று வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை அதிகரிக்கும் போதெல்லாம் தமிழகம் மற்றும் கேரள பொறியாளர்களும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த
ஆட்சியர்களும் இணைந்து செயல்பட்டு தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையில் அனுமதிக்கப்பட்ட அளவான 142 அடியிலேயே நீரின் அளவு இருக்கும்படி தமிழக அரசானது பராமரித்துக் கொள்வதுடன், கூடுதல் நீரினை வெளியேற்றி வருகிறது.
கோரிக்கையை நிறைவேற்றுங்கள்: முல்லைப் பெரியாறு உப குழுவின் தலைவர் கடந்த புதன்கிழமையன்று (ஆக. 15) ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது, டிஜிட்டல் முறையில் நீரினை அளவிடும் மானியானது நன்கு இயங்குவதைக் கண்டறிந்துள்ளார். மேலும், அணையில் நீரின் அளவை அறிவதற்கு தட்டுகள் வடிவிலான மானிகள் பொருத்தப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவை அளவிட தமிழக அதிகாரிகளை கேரள மாநில அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. எனவே, அணையில் அதிகரித்துள்ள நீரின் அளவைப் பொருத்தே நீர் வரத்தினை கணக்கிட வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவின் அளவை கேரள மாநில அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சார விநியோகத்தை உடனடியாக வழங்கக் கோரும் மற்றொரு கோரிக்கையை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மின்சாரம் வழங்குவதற்காக இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டபடி, கேரள மின்வாரியத்திடம் ரூ.1.65 கோடியை வைப்புத் தொகையாக தமிழக அரசு செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசானது, கேரள மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகளுக்கு உடனடியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு தாங்கள் அளித்திட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவைப் பொருத்து, நீரைத் தேக்குவது மற்றும் வெளியேற்றிவது ஆகிய ஒழுங்காற்றுப் பணிகளை தமிழக நீர்வள ஆதாரத் துறையானது மேற்கொண்டு வருகிறது என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.