10% இடஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் மறுசீராய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்

10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
10% இடஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் மறுசீராய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்

10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு “சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு” என்று கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களே “செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்” நீதிபதி ரவீந்திர பட்டின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் “கேசவானந்த பாரதி”, “இந்திரா சாஹ்னி” (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள். அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள். 

ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது. அதனால்தான் “இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது” என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டித் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட், தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே “நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார். இறுதியில் “இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது” என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

ஆகவே நாட்டில் உள்ள 82 சதவீத பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, சமூகநீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com