முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 511 கன அடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 453 கன அடியாகவும், சனிக்கிழமை விநாடிக்கு 294.36 கன அடியாகவும் இருந்தது. அதேநேரத்தில் அணையிலிருந்து விநாடிக்கு 1778.75 கன அடி தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. 

அணை நிலவரம்

சனிக்கிழமை அணையின் நீர்மட்டம் 133.90 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 5,609 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு, 294 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1778.75 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

 சுருளி அருவி (கோப்பு படம்)
 சுருளி அருவி (கோப்பு படம்)

மின் உற்பத்தி

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 40 மெகாவாட் என மொத்தம் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிக்கத் தடை

தேனி மாவட்டம் பச்சக்கூமாச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள தூவானம் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விடுவதால், சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது, இதனால் 50 ஆவது நாளாக சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு செய்யப்பட்டது. வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, தூவானம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்தால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மஹாளய அமாவாசையன்று குளிக்க அனுமதி 

ஆண்டு தோறும் வரும் புரட்டாசி மாத அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வருகிறது, இது ஆன்மீக ரீதியில் சிறப்பான நாளாகும், இதை மஹாளய அமாவாசை என்பர். அன்று புனித நதிகளில் நீராடி முன்னோர் வழிபாடுகள் செய்வது நன்மை தரும், சுருளி அருவியில் குளிக்கத் தடை இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை குளிக்க அனுமதிக்க ஆட்சியர் ஏற்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com