உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தீபம் ஏற்ற வேண்டும்! பொன். ராதாகிருஷ்ணன்
தீபம் ஏற்றம் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் பற்றி பாஜக மூத்த தலைவர் கடும் விமர்சனம்..

பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அரசாங்கம் செயல்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமை வருகை தந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு மட்டும் அனுமதி எனக் கூறிவிட்டு அரசியல் கட்சியினரைக் கைது செய்வது முறையற்ற செயல். உண்மையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், சில அமைச்சர்களும்தான்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதும், அதன்படி நடப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் நூற்றாண்டு காலமாக நடந்து வரும் நடைமுறையின் அடிப்படையிலும் தீபம் ஏற்றியாக வேண்டும். இன்றைக்குத் தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்விக்கு, நிச்சயம் ஏற்ற வேண்டும் என்பதே எனது பதில்.
தற்போது ஆட்சியில் உள்ள த.வெ.க. அரசு, மத அடிப்படையிலான தவறுகளைத் தடுக்கத் தவறிவிட்டது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு வாக்குகளைப் பெறுவதற்காக அரசு நாடகம் ஆடுகிறது. இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் உண்மையாக இருக்காது. 'சொந்த காரியம் ஜிந்தாபாத்' என்பதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.
தொல்லியல் துறை சார்பில் 'சர்வே கல்' என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள். இந்த அரசாங்கம் பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிவிட்டன. கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த 6 மாதங்களாக இதுகுறித்து யாருடனும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல், கடைசி ஒரு வாரத்தில் மட்டும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


