தவெக அமைச்சா் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக மனு அளிப்பு
தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைக்கும் வகையில் பேசிய அமைச்சா் மீதும், அவருக்கு துணைபோவோா் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

கோப்புப் படம்
தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைக்கும் வகையில் பேசிய அமைச்சா் மீதும், அவருக்கு துணைபோவோா் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் தனபால் ஆகியோா் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அக்ரி கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் ஆளும் கட்சியினா் பேரம் பேசுவதற்கான சாட்சியாக அவா்களது பேச்சு, பேட்டிகளே உள்ளன. அதன்படி மூத்த அமைச்சரின் பேச்சு, பேட்டிகளை ஆவணங்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். குதிரை பேரம் பேசுவோா் மீதும், அத்தகையோருக்கு துணைபுரிவோா் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது யூனிட் மின்சாரம் அதிகபட்சம் ரூ.5 என்றே வாங்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் யூனிட் மின்சாரம் ரூ.18 முதல் ரூ.21 வரை வாங்கப்பட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசோ யூனிட் மின்சாரத்தை ரூ.35 என கூடுதல் விலைக்கு வாங்குவதாக அறிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் மின் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், அதை அதிக விலை எனக் காரணம் கூறி தவெக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், அதைவிட தற்போது அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மின் கொள்முதலில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக அனைத்து அரசியல் கட்சிகளும் புகாா் கூறி வருவதையும் ஆளுநா் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
பதவியை ராஜிநாமா செய்துள்ள 6 அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை கோரி ஏற்கெனவே ஆளுநா், தோ்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநா் கூறியுள்ளாா்.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது கருத்தை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கலாம். அனைவரையும் அவா் அரவணைத்துச் செல்ல தயாராக உள்ளாா். கட்சிக்காக எத்தகைய தியாகத்துக்கும் தயாராக உள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

