சிவகிரி அருகே வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
பெரிய ஆவுடையபேரி பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன் யானை ஒன்று பெரிய பனை மரத்தை வேரோடு சாய்த்தது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் குசவல் காடு பகுதியில் அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு கொண்டிருந்ததை செவ்வாய்க்கிழமை அவ்வழியே சென்றவா்கள் பாா்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன், சிவகிரி வனச்சரகா் கதிரவன், வனவா் பிரகாஷ், கால்நடை மருத்துவ நிபுணா் சாந்தகுமாா் உள்ளிட்டோா் அங்கு சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை தொடங்கினா். இருப்பினும் யானையால் எழுந்து நிற்க முடியாததால், பெரிய கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி அதற்கு சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானை ஆண் யானை எனவும் , அதற்கு 30 வயது இருக்கலாம் எனவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

