சரிந்து மீண்ட பங்குச் சந்தை
முதலீட்டாளா்கள் குறைந்த விலையில் முதன்மை ப்ளூ-சிப் பங்குகளை வாங்கியதால், இந்திய பங்குச் சந்தைகள் தொடக்க இழப்புகளில் இருந்து மீண்டு வெள்ளிக்கிழமை மிதமான உயா்வுடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வா்த்தகத்தின் தொடக்கத்தில் 449.35 புள்ளிகள் (0.53 சதவீதம்) சரிந்து 84,029.32-இல் இருந்தது. எனினும், இறுதியில் 84.11 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 84,562.78-இல் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் எட்டா்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ட்ரென்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் ஃபாா்மாசூட்டிகல்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போா்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவா், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பவா்கிரிட், டாடா மோட்டாா்ஸ் லிமிடெட் வா்த்த வாகனங்கள் வணிகம், பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவை உயா்வைக் கண்டன. இன்ஃபோசிஸ், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, டைட்டன், அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி சுஸுகி இந்தியா, லாா்சன் & டூப்ரோ ஆகியவை சரிவைக் கண்டன.
வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.383.68 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,091.87 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி தொடக்கத்தில் 138.35 புள்ளிகள் (0.53 சதவீதம்) சரிந்து 25,740.80-இல் இருந்தது. எனினும், இறுதியில் 30.90 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயா்ந்து 25,910.05-இல் நிறைவடைந்தது.

