பதச் சேதம் | சொற் பொருள் |
கன ஆலம் கூர் விழிமாதர்கள்
| கன: மிகுந்த, பெரிய; ஆலம்கூர் விழி: நஞ்சு நிறைந்த விழி; மனசாலம் சால்: மனத்திலே ஜாலம் (நடிப்பு) நிறைந்த; கனபோக: மிகுந்த போகத்தையுடைய; அம்போருகம்ஆம்: தாமரையை ஒத்த; |
கசிவு ஆரும்கீறுகி(ள்)ளால்
| கசிவு ஆரும்: அன்பு மிகுந்த; கீறுகிளால்: கீறல், கிள்ளல்களால்; காளிம: கரிய, கறுத்த; பேய் அமுது ஊண் இடும்: பேய்த்தனத்தை ஏற்படுத்தும் உணவை உண்ணத் தரும்; |
மனம் ஏல் அம் கீல(க)கலாவிகள்
| கீலக: தந்திரம் நிறைந்த; கலாவிகள்: தந்திரம் மிக்கவர்கள்; மயமாயம்: மாயமயம்—மாயம் நிறைந்த; கீத விநோதிகள்: இசையில் வல்லவர்கள்; மருள் ஆரும்: மயக்கம் நிறைந்த; வில்: ஒளிவிடும்; |
மதி மாடம் வான்நிகழ்வார் மிசை
| மதி மாடம் வான்நிகழ்வார்: நிலவைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மாடங்களோடு கூடிய வீடுகளில் இருப்பவர்கள்; உன மலர்: உன்னுடைய மலர்; உனவே: உன்னவே, நினைக்கவே, தியானிக்கவே; |
தனதானந் தானனதானன என
| அளி: வண்டு; ததைசேர்: நெருங்கிச் சேர்ந்துள்ள; தண்: குளிர்ந்த; மாலிகை: மாலை; |
தகர் ஏறு அங்கு ஆர்அசம் மேவிய
| தகர் ஏறு: தகரச் செய்யக்கூடியதும் அழிவு செய்வதுமான; அசம்: ஆடு (முருகனுடைய ஆட்டுவாகனம் இங்கே குறிப்பிடப்படுகிறது); |
தினம் ஆம் அன்பா(க)புன(ம்)
| புனம்: தினைப்புனம்; தனிமான்: ஒப்பற்ற, மான்போன்ற--வள்ளியின்; இன்பா: பிரியம் கொண்டவனே; வாமா: அழகனே; |
திகழ் வேடம்காளியொடு ஆடிய
| சங்கேச: சங்கமேச—காவிரியும் பவானியும் சங்கமிக்கும் திருநணா என்னும் தலத்திலுள்ள சிவன்; வீறிய: விளங்கி நின்ற; |
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள்... பெரியதும் நஞ்சு நிறைந்ததுமான விழிகளைக் கொண்ட பெண்கள்; மனத்திலே வஞ்சம்கொண்ட பழிகாரிகள்;
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள்... பெரிதும் போகத்தை உடையதும் தாமரைக்கு இணையானதுமான மார்பகங்களின்மீது அன்பின் மிகுதியால் ஏற்பட்ட கீறல், கிள்ளல் குறிகளால் பழிப்புக்கு இடம்தரக்கூடிய வஞ்சகம் நிறைந்த வீணிகள்;
களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம் கீல(க) கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள்.. ஆவேசத்தை ஏற்படுத்துதுவம் பேய்க் குணத்தை ஏற்படுத்துவதுமான உணவு வகைகளை இடுகின்ற அசுத்தர்கள்; மனத்தில் சூழ்ச்சி நிறைந்தவர்களான தந்திரசாலிகள்; மாயம் நிறைந்த இனிய இசையில் வல்லவர்கள்;
மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்) மகளீர் வில் மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ் கூரும் பாழ் மனமாம்... மயக்கம் தருபவர்கள்; தம்மை மோகித்து வந்தவர்களின்மேல் விழுகின்ற பெண்கள்; ஒளிபொருந்தியதும் நிலவைத் தொடுவதுமான மாடங்களை உடைய வீடுகளில் இருப்பவர்கள் (என்று இவ்வகையான பெண்களிடம்) மகிழ்ச்சியடைகின்ற பாழான இந்த மனமானது,
உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ... தாமரை மலரை ஒத்த உனது திருவடிகளை தியானிக்க அருள்புரிய வேண்டும்.
தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா... தனதானந் தானன தானன என்ற ஒலியோடு வேதமோதுபவர்களுடைய ஓசையைக் காட்டிலும் அதிகமான ஓசையைக் கொண்டதாக வண்டுகள் சூழ்ந்திருக்கிற மாலைகளை அணிகின்ற மார்பனே!
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே... (எல்லாவற்றையும்) தகர்த்து எறிந்தபடித் திரிந்த ஆட்டை வாகனமாகக் கொண்டு அமர்ந்த* குக வீரனே! அம்பிகை பாலனே! மிகவும் தகைமையுடைய அன்பர்களும் அடியார்களும் மகிழ்கின்ற பெருஞ்செல்வமே!
(* நாரதர் செய்த வேள்வியிலிருந்து வெளிப்பட்ட முரட்டு ஆட்டை வீரபாகுவைக் கொண்டு பற்றிவரச் செய்து, முருகன் அதைத் தன் வாகனமாகக் கொண்ட கந்தபுராண நிகழ்வு சொல்லப்படுகிறது.)
தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா... எப்போதும் மாறாத அன்போடு தினைப்புனத்தில் இருந்த ஒப்பற்ற மானாகிய வள்ளியின் தோளை அணைத்து விளையாடியவனே! தினை மாவின்மீது பிரியம் கொண்டவனே! தேவர்கள் தலைவனே! அழகனே!
திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க(மே)ச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே.... திகழ்கின்ற வேடத்தோடு காளியுடன் நடனமாடிய ஜெகதீசனும் சங்கமேசனும் ஆகிய நடராஜப் பெருமாள் விளங்கும் திருவாலங்காட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை:
‘தனதானம் தானன தானன’ என்று வேதகோஷங்களுக்கும் மேற்பட்டு ஒலிக்கின்ற வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையை அணிந்தவனே! முரட்டு ஆட்டுக் கடாவை அடக்கி வாகனமாகக் கொண்ட குகனே! அம்பிகை புதல்வனே! அடியார்களுடைய பெருஞ்செல்வமே! உன்மீது மாறாத அன்போடு தினைப்புனத்தில் இருந்த வள்ளியின் தோள்களை அணைத்தவனே! தினைமாவின்மேல் பிரியம் கொண்டவனே! தேவர்களின் தலைவனே! அழகனே! காளியோடு நடமாடிய சங்கமேசனாகிய நடராஜப் பெருமாள் குடிகொண்டிருக்கும் திருவாலங்காட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
பெரியதும் நஞ்சைப் போன்றதுமான கண்களை உடையவர்கள்; வஞ்சனை நிறைந்தவர்கள்; போகத்தைத் தருகின்றதும் தாமரை மொட்டைப் போன்றதுமான மார்பகங்களை உடையவர்கள்; மயக்கத்தையும் வெறியையும் தருகின்ற உணவை அளிப்பவர்கள்; அசுத்தர்கள்; தந்திரசாலிகள்; தம்மை நாடி வந்தவர்களின் மேலே விழுகின்றவர்கள்; நிலவைத் தொடுகின்ற மாடங்களைக் கொண்ட மாளிகைகளில் இருப்பவர்கள் என்று இத்தன்மையரான பெண்களிடத்திலே மகிழ்ச்சியடைகின்ற இந்தப் பாழ்மனம் தாமரை மலர்களை ஒத்த உனது திருவடிகளை எப்போதும் தியானிக்குமாறு அருள்புரிய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

