இளம் படைப்பாளி!: குரங்கு காப்பாற்றிய மயில்!
ஓர் அடர்ந்த காட்டுல ரெண்டு மயில் நண்பர்களா இருந்துச்சாம். அதுல ஒண்ணு பேரு விக்கி. இன்னொண்ணு பேரு சுந்தர்.

கமல் சங்கர் 3 - ஆம் வகுப்பு, செங்கல்பட்டு

கமல் சங்கர் 3 - ஆம் வகுப்பு, செங்கல்பட்டு
ஓர் அடர்ந்த காட்டுல ரெண்டு மயில் நண்பர்களா இருந்துச்சாம். அதுல ஒண்ணு பேரு விக்கி. இன்னொண்ணு பேரு சுந்தர்.
ஒரு நாள் விக்கி சுந்தர் கிட்டே, ""மனுசங்க நம்ம இடத்துக்கு வர மாதிரி நாமும் அவங்க இடத்துக்குப் போய்ப் பார்த்தால் என்ன?'' அப்படீன்னு கேட்டுச்சாம்.
""டேய்!.... அங்க எல்லாம் எதுக்குடா போகணும்?'' னு சுந்தர் சொல்லிச்சு.
""அங்க மனுஷங்களோட வீடுகள், கோயில்கள், பெரிய பெரிய சாலைகள்,.... இப்படி பார்க்க அங்கேயும் நிறைய இருக்குடா''
""டேய்!....நாம அங்க போனா இங்க இருக்கிற மாதிரி சந்தோஷமாவும், நிம்மதியாவும் இருக்க முடியாதுடா.... வேணாம்டா இந்த விபரீத ஆசை! சொன்னா கேளுடா''
""அடப்போடா!..... நான் போகத்தான் போறேன்!.....நீ வேணும்னா எங்கூட வா.... இல்லேன்னா இங்கேயே இரு!.... நான் போய்ப் பார்த்துட்டு வந்து அங்க பார்த்ததை எல்லாம் சொன்னதும் நீ வரத்தான் போறே!''
""நீ என்ன சொன்னாலும் நான் இந்தக் காட்டை விட்டு வரமாட்டேன்!'' என்று சொல்லிவிட்டு சுந்தர் காட்டுக்குள் சென்றுவிட்டது.
தன் முடிவில் மாற்றம் இல்லாத விக்கி நகரத்திற்கு வந்தது. அது வந்த நேரம் அதிகாலை. நகரம் அமைதியாகக் காட்சியளித்தது. நேரம் செல்லச் செல்ல வாகனங்களின் பேரிரைச்சலும், மனிதர்களின் நடமாட்டமும் விக்கிக்கு எரிச்சல் மூட்டியது.
""என்ன இது?....ஒரே சத்தமா இருக்கு!'' என நினைத்தது. ரொம்ப தூரத்திலிருந்து பறந்து வந்ததால் அதற்குக் களைப்பாக இருந்தது. ஓய்வு எடுக்க இடம் தேடியது. அங்கு மரங்களே இல்லை. கடைசியாக ஒரு வீட்டின் மதில் சுவர் மீது அமர்ந்தது.
பசி காரணமாக சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தது. அங்கு ஒரு பழக்கடையைப் பார்த்தது. அந்தக் கடைக்கு அருகில் செல்லச் செல்ல மனிதர்கள் இதனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தனர்.
""இவங்க எதுக்கு நம்ம பார்த்து ஓடி வர்றாங்க?'' ன்னு நினைத்தது. அதற்குள் மனிதர்கள் அதன் தோகையைப் பிய்க்க ஆரம்பித்தார்கள். அது வலி பொறுக்க முடியாமல் கத்தியது!.... கதறியது!
அந்த நேரம் பார்த்து அங்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி முதலாளி வந்தார். ""அடடா!.... இன்று நமக்கு நல்ல வேட்டை!.... '' என்று நினைத்து அந்தக் கூட்டத்துக்குள் பாய்ந்தார். விக்கியைப் பிடித்துக்கொண்டார். பிறகு சர்க்கஸில் இருந்த ஒரு கூண்டில் அடைத்து விட்டார்.
பிறகு, ""டேய் முனியா!.... இங்க வாடா!.... இங்க வந்து பாருடா நான் என்ன கொண்டுவந்திருக்கேன்னு!''
""என்ன முதலாளி,.... கூப்பிட்டீங்களா?'' என்றபடி முனியன் வந்தான்.
""பாருடா இந்த மயிலை!.... நாளைக்கு நம்ம கூடாரம் களை கட்ட போவுது!.... போடா அதற்கு நல்ல பயிற்சி கொடு!'' என்றார்.
விக்கி முதலில் பயிற்சிக்கு மறுத்தது. பிறகு வேறு வழியில்லாமல் முனியன் அளித்த பயிற்சிக்கு ஒத்துழைத்தது.
அங்குள்ள ராம் என்ற மனிதக் குரங்கு விக்கியைப் பார்த்துக்கொண்டு இருந்தது!
முனியன் பயிற்சியை முடித்துக்கொண்டு விக்கியைக் கூண்டில் அடைத்துவிட்டுச் சென்றான். பிறகு ராம் விக்கியிடம் மெல்லப் பேச ஆரம்பித்தது.
""அட!..... என்ன புது நண்பா!....நீ எப்படி இங்க வந்தே?... ரொம்ப சோகமா இருக்கியே..... உன்னைப் பார்த்தா ரொம்ப அழுத மாதிரி இருக்கு.... நீ யார்?... உன் பேர் என்ன?.... சொன்னா என்னால முடிஞ்ச உதவியைச் செய்வேன்!...'' என ராம் விக்கியிடம் கேட்டது.
விக்கி நடந்த அனைத்தையும் ராமிடம் கூறியது.
""கவலைப்படாதே!....வாய்ப்பு கிடைச்சா, நான் உன்னை கண்டிப்பா காப்பாத்துறேன்!....என்ன நம்பு!'' என்று ராம் சொன்னது.
""நீ எப்படி என்ன காப்பாத்துவே?... நீயும் இங்கதான் இருக்கே.... '' என்றது விக்கி.
""வாய்ப்புக் கிடைச்சான்னுதானே சொன்னேன்.... கடவுளை வேண்டிக்கோ... என்னை நம்பு!... நான் உன்னை உன் நண்பன் கிட்டே கண்டிப்பா கூட்டிட்டுப் போவேன். நாளை சந்திப்போம்... நிம்மதியாத் தூங்கு... நான் வரேன்...'' என்று சொல்லிட்டு ராம் போயிடுச்சு.
விக்கி கடவுளை வேண்டிக்கொண்டே உறங்கிவிட்டது.
மறுநாள் முனியன் ராமின் கூண்டைத் திறந்துவிட்டு, பின் விக்கியின் கூண்டையும் திறந்தான். அந்த சமயம் அவனது முதலாளி அழைத்த குரல் கேட்டது. திறந்த கூண்டுகளை அப்படியே விட்டுவிட்டு அவசரமாகச் சென்றுவிட்டான்! .... இதுதான் சமயம் என்று ராம் யாருக்கும் தெரியாமல் விக்கியை வெளியே அழைத்து வந்தது.
""அட,... பயப்படாமல் வா நண்பா!.... நாம வேற யாரும் வர்றதுக்குள்ளே இந்க இடத்தை விட்டுப் போயிடலாம்!.... '' என்று சொல்லி விக்கியை அழைத்துக்கொண்டு காட்டை நோக்கிச் சென்றது.
காட்டில் வருத்தத்துடன் இருந்த சுந்தரிடம் பத்திரமாக விக்கியை சேர்த்தது ராம். பிறகு அவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக காட்டில் சந்தோஷமாக வாழ்ந்தாங்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...