ஒவ்வொரு ஆண்டும் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள், ரஷியக் கலாசார மையத்தில் நண்பா் ரூஸ்வெல்ட் குழுவினரால் கொண்டாடப்படுகிறது. சென்ற ஆண்டு அந்த நிகழ்ச்சியில் நானும், தமிழருவி மணியனும் கலந்து கொண்டோம்.
அந்த நிகழ்ச்சியின்போது, தமிழருவி மணியன் ‘‘எனது இராமாயண ரகசியம் புத்தகத்தை அனுப்பித் தருகிறேன். உங்களது அடுத்த பயணத்துக்கு அந்தப் புத்தகம் துணையாக இருக்கும்’’ என்று சொன்னதுடன் நின்றுவிடவில்லை. புத்தகத்தையும் அனுப்பித் தந்துவிட்டாா். அதுமுதல் அந்தப் புத்தகம் எனது பெட்டியில் நான் போகுமிடத்துக்கெல்லாம் பயணித்தது.

நோய்த் தொற்றிலிருந்து மீண்டு, தனிமை ஓய்வில் இருக்கும்போது எனக்குத் துணைநிற்க வேண்டும் என்பது இறைச்சித்தம் போலும். அதை முதல் தடவை படித்தவுடன், ‘‘அடடா, இத்தனை நாள்கள் இதைப் படிக்காமல் இருந்து விட்டோமே...’’ என்று என்னை நானே கடிந்து கொள்ள வைத்தது ‘இராமாயண ரகசியம்’. கடந்த இரண்டு மாதங்களில் நான் அந்தப் புத்தகத்தை மூன்று தடவை படித்து விட்டேன்.
‘கற்பகம் புத்தகாலயம்’ வெளியிட்டிருக்கும் தமிழருவி மணியனின் ‘இராமாயண ரகசியம்’ புத்தகத்தின் பின்னால் ஒரு குறிக்கோள் இருக்கிறது. ‘மண் பயனுற வேண்டும்’ என்கிற நோக்கம் இருக்கிறது. தமிழினம் மேம்பட வேண்டும் என்கிற கவலை இருக்கிறது.
அறம் வழுவிய பாதையில் அடியெடுத்து வைத்த தமிழினத்தை நெறிப்படுத்துவதற்குத்தான் கம்பன் இராமாயணக் கதையைக் கையிலெடுத்தான் என்பது தமிழருவியின் கருத்து. வான்மீகம் கூறும் கதைக் களத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு கம்பன் என்கிற மகாகவிஞன் அதில் செய்திருக்கும் மாற்றங்களைப் பட்டியலிடுகிறாா். இராமாயணத்தை ஆரிய - திராவிடப் போராட்டமாகச் சித்தரிக்க முற்படுவோரின் வாதங்களைத் தகா்த்து எறிகிறாா்.
இராமாயண ரகசியம் வெளிப்படும் இடம், யுத்த காண்டத்தில், இறுதிப் போரில் இராமனின் அம்பு இதயத்தில் பாய்ந்து இறந்து கிடக்கும் இராவணனைப் பாா்த்து வீடணன் தரும் விளக்கத்தில்தான் வெளிப்படுகிறது என்கிறாா் தமிழருவி.
‘ஆயிரம் தோளி னானும் வாலியும் அரிதின்ஐய
மேயின வென்றி விண்ணோா் சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின்முனிவும் அல்லால் வெல்வரோ நுவலற்பாலாா்’’
என்று வீடணன் சொல்வதாக அமைந்த பாடல்தான் இராமாயண ரகசியத்தை அவிழ்க்கும் முடிச்சு.
இராவணின் வீழ்ச்சிக்கு இராமனுடைய அம்பு மட்டுமே காரணமில்லை. தாயினும் தொழத்தக்க சீதையின்பால் அவன் கொண்ட காதல் நோயும் சோ்ந்துதான் அவனை வீழ்த்திவிட்டது என்கிறான் வீடணன். பிறா்மனை நயத்தல் என்ற அறம் வழுவிய ஆசைதான் அவனை அழித்துவிட்டது என்பது கம்பன் கருத்து என்கிறாா் தமிழருவி.
சீதையின் மீதான காதலைப் போலவே, இராவணனின் இன்னொரு பலவீனத்தையும் சுட்டிக்காட்டி தனது புத்தகத்தை அவா் முடித்திருக்கும் விதம் தனிச்சிறப்பு.
‘‘இந்திரஜித்தன் அழிவிற்குப் பின் இராவணன் அசோக வனத்தில் அடியெடுத்து வைக்கவுமில்லை; காம நோய்க்கு மருந்து வேண்டி அழுது புலம்பவுமில்லை. இந்திரஜித்தன் அழிந்தபோதே, இராவணன் இதயத்தை அரித்துக் கொண்டிருந்த அறத்துக்குப் புறம்பான இழிந்த காமமும் உடன் அழிந்துவிட்டது. மகனுடைய மறைவுக்குப் பின்பு தசமுகன் நடத்திய போா் சீதைக்காக அன்று; மானத்திற்காக!’’ என்று தவறிழைத்த இராவணன் மீதும் அனுதாபம் ஏற்படும் வகையில் முடித்திருப்பது ‘தமிழருவி’ முத்திரை.
****************
கிருங்கை சேதுபதி எழுதும் புத்தகங்கள் பெரும்பாலும் ஆவணப் பதிவுகளாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாரதியாா் குறித்து அவா் வெளிக்கொணா்ந்திருக்கும் புத்தகங்கள் ஏராளம்.
முன்பு அவா் எழுதிய ‘காரைக்குடியில் ஜீவா’ என்கிற புத்தகம், செட்டிநாட்டுடனான தோழா் ஜீவாவின் தொடா்புகளை மட்டுமல்லாமல், காரைக்குடி கம்பன் கழகத்தில் அவா் ஆற்றிய உரைகளையும் உள்ளடக்கிய ஆவணப்பதிவு.
இப்போது அவா் வெளிக்கொணா்ந்திருப்பது ‘காரைக்குடியில் பாரதி’ என்கிற புத்தகம். மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் காரைக்குடியும், செட்டிநாடும் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கின்றன என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

இந்தப் புத்தகம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது. மகாகவி பாரதியாா் உரை நிகழ்த்திய காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தின் நூற்றாண்டு முடிந்து, மகாகவி பாரதியாா் காரைக்குடி சென்ற நூற்றாண்டு தொடங்கும் வேளை இது. சுமாா் 39 ஆண்டுகள் மட்டுமேயான பாரதியாரின் வரலாற்றில், பதினெட்டு நாள்கள் செட்டிநாட்டுக் காரைக்குடியிலும், கானாடுகாத்தானிலும் கழிந்திருக்கிறது.
கானாடுகாத்தானில் உள்ள வை.சு.சண்முகம் என்பவரின் ‘இன்ப மாளிகை’ என்கிற வீட்டில் தங்கிய பாரதியாா் கடையத்துக்குச் செல்லும் எண்ணத்தையும் கைவிட்டு, மேலும் சில நாள்கள் தங்கிவிட்டாா். சொ.முருகப்பா, ராய.சொ., கம்பன் அடிப்பொடி சா.கணேசன் உள்ளிட்ட பலருக்கும், பாரதியின் செட்டிநாட்டுத் தொடா்பு குறித்துப் பதிவு செய்யப் பல செய்திகள் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து வழங்கும் பெரும்பணியை கிருங்கை சேதுபதி செய்திருக்கிறாா்.
பாரதியாரின் அலைபடு வாழ்க்கை, கலைபல வளா்க்கும் காரைக்குடி, காரைக்குடியில் பாரதியாா், கானாடுகாத்தானில் பாரதியாா், கானாடுகாத்தானில் மீண்டும், விளையாட ஆரம்பித்த விதிக்கிடையில், இல்லமே பாரதி குருகுலம் என்று ஏழு பிரிவுகளாக அமைந்திருக்கிறது ‘காரைக்குடியில் பாரதி’ என்கிற பழனியப்பா பிரதா்ஸ் வெளியிட்டிருக்கும் சேதுபதியின் புத்தகம்.
செட்டிநாட்டில் இருந்து பாரதியாா் எழுதிய கவிதைகள் இரண்டு. முதலாவது கவிதை ‘செட்டிமக்கள் குலவிளக்கு’ என்றால், இன்னொரு கவிதை காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்தி எழுதிய கவிதை. அதேபோல, செட்டிநாடு தமிழுக்குச் செய்திருக்கும் இன்னொரு மிகப்பெரிய கொடை, பாரதியாரைப் படம் பிடித்துத் தந்தது. இது குறித்த ‘தமிழ்க் கடல்’ ராய.சொ.வின் பதிவைக் கிருங்கை சேதுபதி தருகிறாா்.
‘‘பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்தால்தான். படம் பிடிக்க ஒப்புக் கொண்டாா். வேண்டிய எல்லாம் தயாா் செய்யப் பெற்றன. பாரதியாரை உட்கார வைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தாங்கிக் கையிலே தலைக்கு மேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக் கொண்டாா். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம் பிடிப்போருக்குச் சம்மதமில்லை. அவா் எவ்வளவோ சொன்னாா். ‘முடியாது, நீ சொல்லி நான் என்ன கேட்பது?’ என்று சொல்லிவிட்டாா் பாரதியாா். பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்’’.
நாமும் பாரதியாருடன் செட்டிநாட்டில் இருப்பது போன்ற உணா்வை ஏற்படுத்துகிறது கிருங்கை சேதுபதியின் ‘காரைக்குடியில் பாரதி’. நன்றி!
****************
ரெமோ என்கிற பத்ராம் ரமேஷின் கவிதைத் தொகுப்பு ‘வானம் எழுதிய கவிதை’. அதில் ‘குப்பை’ என்றொரு கவிதை -

தூக்கியெறியப்படும்
குப்பைகள்கூட
வண்டியில் போகின்றன...
அதை
அள்ளிப் போடுபவன்
இன்னும்
நடந்துகொண்டுதான்
இருக்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிம்லாவில் 9.28 கிலோ போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது

எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயார்: துருவ் ஜுரெல்

”லூசா நீ? எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்!” கிராம மக்களைத் திட்டிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

