
நற்றிணைப் பாடல் ஒன்று, "ஒரு மகள் உடையேன்' (184) என்று தொடங்குகின்றது. இதனைப் பாடியவர் பெயர் தெரியவில்லை. பெரியாழ்வாரும் தாயின் பாவனையில், "ஒருமகள் தன்னை உடையேன்' (300) என்று பாடியிருக்கிறார்.
வடிவத்தால் காணும் இவ்வொப்புமை மட்டுமன்றி உள்ளடக்கத்தாலும் அவை தம்முள் ஒத்திருப்பது வியப்பளிக்கின்றது. முதலில் நற்றிணைப் பாடலைப் பார்க்கலாம்.
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்;
"இனியே, தாங்குநின் அவலம்' என்றிர்; அது மற்று
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடை யீரே!
உள்ளின் உள்ளம் வேமே - உண்கண்
மணிவாழ் பாவை நடை கற் றன்னஎன்
அணிஇயல் குறுமகள் ஆடிய
மணிஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே!
பாலைத் திணையில் நற்றாய் கூற்றாகவுள்ள இப்பாடலின் துறை மனை மருட்சி.
தலைவியைத் தலைவன் உடன் போக்கிற் கொண்டு சென்றதைச் செவிலியால் அறிந்த நற்றாய், மனையின் கண் நிகழ்ந்த தலைவியின் செயல்களை நினைந்து மயங்கிக் கூறுவதாக இது அமையும்.
"அறிவுடைய பெண்களே! நான் உங்களைப் போலப் புதல்வியர் பலரைப் பெற்றேன் இல்லை. ஒரே மகளை உடையவள். அவளும் கூர்வேல் காளையொடு அரிதாகிய காட்டு வழியிற் சென்றனள் என்பது அறிந்து அவள் மீது கொண்டிருந்த என் அவாவும் நீங்கியது.
நீங்கள் சொல்வதைக் கேட்டு அவளின் பிரிவுத் துன்பத்தைத் தாங்குதல் எங்ஙனம் இயலும்? கண்ணின் மணியூடுள்ள பாவை - வெளிவந்து நடை பயின்றது போல அழகிய சாயலையுடைய என் குறுமகள் விளையாடிய நீல மணி போன்ற நொச்சியையும் திண்ணையையும் கண்டு - எங்ஙனம் ஆறியிருப்பேன்? அவற்றை நினைத்த மனமும் வெந்தொழியுமல்லவா? இனி, எவ்வாறு பிழைப்பேன்?' என்கிறாள்.
மனையிடமெங்கும் சுற்றிக் காணுமிடமெங்கும் அவளாகவே தோன்ற ஓடியாடித் திரிந்தவள் என் மகள். இப்போது அங்கு அவள் இல்லாத நிலையில் - தாயானவள் அடையும் மருட்சியை - மயக்கத்தைக் கூறுகிறது பாட்டு.
இனிப் பெரியாழ்வார் பாசுரமும் ஒரே மகள் தன் காதலனோடு உடன் போக்கிற் சென்ற நிலையில் அவள் இல்லாத வீடு வெறிச்சோடிப் போனதைப் பேசுவதாகவே அமைகிறது. சலசலத்தோடும் தெளிந்த நீரோடை போலமைந்த பதிகத்தின் ஒரு பாசுரத்தை மட்டும் கீழே காண்க!
நல்லதோர் தாமரைப் பொய்கை
நாள்மலர்மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தால் ஒத்த தாலோ,
இல்லம் வெறியோடிற் றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய்
மதுரைப் புறம்புக்காள் கொல்லோ! (297)
இங்கு, "வீடுவெறிச்சோடிவிட்டது' என்னும் பொருளமைத்துப் பாடிய "இல்லம் வெறியோடிற்றாலோ' என்ற ஓர் அடியிலேயே தாய் - மனையகத்து அடையும் மருட்சி (மயக்கம்) தெளிவுறப் பேசப்பட்டுவிட்டது.
நற்றிணைத் தலைவியின் தாய் பேசிய அதே மனநிலையில்தான்,
"ஒருமகள் உடையேன்' என்னும் அதே மொழியில்தான் பல நூற்றாண்டுகள் கழித்துப் பெரியாழ்வாரின் பாசுரத்தில் வரும் தாயும் பேசுகின்றாள். இவ்வகையில் சாகாவரம் பெற்ற "சாசன'ப் பாடல்கள் இவை.
காலம் மாறினும் மனித உணர்வுகள் மாறுவதில்லை என்பதைத் தானே
நற்றிணைப் புலவரும் பெரியாழ்
வாரும் நமக்கு உணர்த்துகின்றனர்.
இனி நிகழ்காலத்துக்கு வருவோம். "பார் மகளே பார்' திரைப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை: "இல்லம் வெறியோடிற்றாலோ' என்கிற தாயின் மனநிலையைத் தந்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது கவியரசரின் பதிவு.
உண்பதென்று உணவை வைத்தால்
உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை போட்டால்
ஓடிவந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிறாய்
புன்னகையில் வாட்டுகிறாய்.
(ஆசிரியர்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.