
விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நிறுவனம் ஒன்று, விண்கலம் மூலம் அஸ்தியைக் கொண்டு சென்று விண்வெளியில் வைத்திருந்து மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், 166 பேரின் அஸ்தியை கொண்டுசென்று விண்வெளியில் வைத்திருக்கும் வகையில், தனியார் நிறுவனம் அஸ்திகளுடன் அனுப்பிய விண்கலம், திட்டமிட்டபடி செல்லாமல், வானில் வெடித்து, கடலில் விழுந்தது.
இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணையிலிருந்து பிரிந்துசென்று விண்கலம் புவி வட்டப் பாதையில் செல்லும்போது, தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த சில வினாடிகளில், அந்த விண்கலம் பசிபிக் கடலில் விழுந்துவிட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களிடம், உறவிகளின் அஸ்தியைக் கொடுத்து விண்வெளிக்குக் கொண்டுசெல்ல முன்வந்தவர்களுக்கு எங்களது மன்னிப்பைக் கோருகிறோம். இந்தத் தவறுக்கு நாங்கள் முழுப் பொறுப்பேற்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களிடம் மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எங்களது திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை என்று நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, விண்வெளிக்குக் கொண்டுசெல்லப்படும் அஸ்தி, மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வகையில் இது திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால், தற்போது விண்கலம் பசுபிக் கடலில் விழுந்துவிட்டதால், அஸ்தியை மீட்பது இயலாது என்றும் தெரிவித்துள்ளது.
விண்வெளிக்குச் சென்று அஸ்தி திரும்பும் என்று நம்பியிருந்த உறவினர்கள், அஸ்தி பசிபிக் கடலில் கரைக்கப்பட்டுள்ளதாகக் கருதவும், வழக்கமாக, ஒருவரது அஸ்தி கடலில் கலக்கப்படுவது மிகவும் பழமையான மரபாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் மக்களுக்கு சமாதானங்களைச் சொல்லியிருக்கிறது.
இதையும் படிக்க.. கடலூர் விபத்தில் 3 பேர் பலி: தமிழ் தெரியாத வடமாநில கேட் கீப்பர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.