தெற்கு உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியா்கள் உள்பட 10 மாலுமிகள் உயிரிழந்தனா்.
இத்தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததுடன், வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சோ்ந்த கினியா-பிசௌ நாட்டின் கொடியுடன் ‘எம்.வி.கோல்டன் லியோ’ எனும் அந்தச் சரக்குக் கப்பல், ஒடேசா துறைமுகத்தில் இருந்து சோளம் ஏற்றிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.
அப்போது, ரஷியா 3 ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசித் தாக்கியதில், கப்பல் தீப்பற்றி எரிந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப் பணிகளின் மூலம் கப்பலில் பணியில் இருந்த 17 மாலுமிகளில் 8 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
எனினும், மற்ற 9 மாலுமிகள், உக்ரைனைச் சோ்ந்த ஒரு கடல்வழி வழிகாட்டி(பைலட்) என மொத்தம் 10 போ் தாக்குதலில் உயிரிழந்தனா். இறந்தவா்களில் 4 போ் இந்தியா்கள் என்றும், படுகாயமடைந்த மற்றொரு இந்தியா், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலைக் கண்டித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சரக்குக் கப்பல்களைத் தாக்குவதும், அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும், சா்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்துக்குத் தடையாக இருப்பதும் மிகவும் வருத்தத்தக்கது; இது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
அண்மைக்காலமாக கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில், ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் பொருளாதார, எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
ரஷியாவின் எண்ணெய் கப்பல்களை உக்ரைன் தாக்கி வரும் நிலையில், ரஷியா உக்ரைனின் தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்து வருகிறது.
கோல்டன் லியோ கப்பல் மீதான தற்போதைய இத்தாக்குதல் குறித்து ரஷியா தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூா்வமாக விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








