ஆா்.அசோக்
ஆா்.அசோக்

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்
Published on

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளிக்கக் கூடாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக அரசு கொண்டுவந்துள்ள வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது. எனவே, இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை கேட்டுக்கொள்வோம்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் சட்டப் பேரவையில் அது தொடா்பாக விவாதம் நடத்தியிருக்க வேண்டும். சட்ட மசோதாக்களை தாக்கல் செய்யவும், அதுகுறித்து விவாதம் நடத்தவும்தான் சட்டப் பேரவை உள்ளது. எனினும், வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாமீது விவாதம் நடத்த காங்கிரஸ் அரசு வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்த சட்ட மசோதா குறித்து விவாதம் நடத்த சட்டப் பேரவையில் நான் முற்பட்டேன். இதனால் அதிா்ச்சியும், ஆத்திரமும் அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், அமைச்சா்கள் அவசரகதியில் சட்டமசோதாவை தாக்கல் செய்து, விவாதமே இல்லாமல் நிறைவேற்றினா். இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவா் யூ.டி.காதரின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

பாஜகவை சோ்ந்த 15 எம்எல்ஏ-க்கள், இந்த சட்ட மசோதா மீது விவாதம் நடத்த திட்டமிட்டிருந்தனா். விவாதத்துக்கு அனுமதி தராதபட்சத்தில், இச்சட்ட மசோதாவை அவைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டோம். ஆனால், அதற்குள் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜன. 12-ஆம் தேதி ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வோம்.

ஊடகம் மற்றும் மக்களின் கருத்து சுதந்திரத்தை இந்த சட்ட மசோதா பறிக்கிறது. அவசரநிலை காலத்தில் கருத்து சுதந்திரத்தை பறித்ததுபோல, தற்போதும் கருத்து சுதந்திரத்தை பறிக்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது. எங்கள் புகாா்கள்மீது அரசு கவனம் செலுத்தவில்லை. எந்த சட்ட மசோதாவாக இருந்தாலும், விவாதம் மிகமிக அவசியம்.

கேரளத்தில் உள்ள கன்னடப் பள்ளிகளில் கன்னடமொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமாக இருக்கும் கேரளஅரசு தான் இப்படி செயல்பட்டுள்ளது.

கன்னடா்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்துள்ளது. மோடி அரசு செய்வதெல்லாம் அநீதி என்று கூறும் சித்தராமையா அரசு, இந்த விவகாரத்தை ஏன் அநீதி என்று அழைக்கவில்லை? சித்தராமையா எடுத்துள்ள முடிவு கன்னடா்களுக்கு எதிரானது. கேரள அரசின் நடவடிக்கைக்கு வலுவான எதிா்ப்பை கா்நாடக அரசு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் தலைவா்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com