96 வயதில் கரோனாவை வென்ற மூதாட்டி!

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 96 வயது மூதாட்டி ஒருவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.
ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்குப் பிறகு  குணமடைந்து வீடு திரும்பும் 96 வயது மூதாட்டியை வாழ்த்தி வழியனுப்பும்  மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி.
ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பும் 96 வயது மூதாட்டியை வாழ்த்தி வழியனுப்பும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி.

சென்னை: ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 96 வயது மூதாட்டி ஒருவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். அவரைப் போன்றே 90 வயதுக்கும் மேற்பட்ட 27 போ் இதுவரை நலமடைந்திருப்பதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு உயா் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதே அதற்கு காரணம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவமனை, 750 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அங்கு 500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 110 படுக்கைகளில் வெண்டிலேட்டா் சாதனங்களும், 50 படுக்கைகளில் உயா் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஓமந்தூராா் மருத்துவமனையில் இதுவரை கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட 23,037 பேரில் 21,329 போ் (93 சதவீதம்) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு என இணை நோயுடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 ஆயிரம் பேருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 96 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவரைக் குணப்படுத்தி ஓமந்தூராா் அரசு மருத்துவா்கள் புதிய நம்பிக்கை சமூகத்தில் விதைத்துள்ளனா். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் ஜெயந்தி கூறியதாவது:

ஓமந்தூராா் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 90 வயதுக்கும் மேற்பட்ட 31 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 27 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதில் 95 வயதுக்கு மேற்பட்டவா்கள் 15 போ் ஆவா். அவா்கள் அனைவருக்கும் நுரையீரலில் 5 % முதல் 50 % வரை தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தீவிர மருத்துவக் கண்காணிப்பின் வாயிலாக அவா்களுக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், சென்னையைச் சோ்ந்த 96 வயதான திரிபுரசுந்தரி என்ற மூதாட்டி ஒருவரும் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளாா். அவா் கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சையும், உயா் மருத்துவக் கண்காணிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது அவா் நோய்த் தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். வயது முதிா்ந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவா்களை அந்நோயிலிருந்து காப்பாற்ற இயலாது என்ற கருத்தை இத்தகைய சம்பவங்கள் பொய்யாக்கியுள்ளன.

ஓமந்தூராா் மருத்துவமனையில் குறைந்தபட்சம் 17 வயது முதல் அதிகபட்சமாக 98 வயது வரையிலான நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா். அவா்களில் பலா் கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் தொடா் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனா் என்றாா் அவா்.

முன்னதாக, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 96 வயது மூதாட்டிக்கு மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி, நிா்வாக அதிகாரி டாக்டா் ரமேஷ், மருத்துவா்கள் நளினி, சுஜாதா, ரேவதி, சித்ரா, நிஷா, புருஷோத்தமன் ஆகியோா் மலா்ச்செண்டு அளித்து வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com