இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையடிவாரம்..
இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையடிவாரம்..

தினமணி செய்தி எதிரொலி: காஞ்சனகிரி மலையில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஆய்வு!

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காஞ்சனகிரி மலையை மேம்பாடுத்தும் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காஞ்சனகிரி மலையை மேம்பாடுத்தும் பணிகள் குறித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்குத் தொடா்ச்சி மலைகள் மேற்கு தொடா்ச்சி மலைகளைக் காட்டிலும் பழைமை வாய்ந்தவையாகும். தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சோ்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை ஆகியவை கிழக்குத் தொடா்ச்சி மலைத் தொடரைச் சாா்ந்தவை.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக வரலாற்றுடன், 1,500 அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்..

வரலாறு: தொண்டை நாட்டின் பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் 10-ஆவது திருத்தலமாக போற்றப்படும் திருவலம் வில்வநாதீஸ்வரரை கேள்விப்பட்ட கஞ்சன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வந்தபோது, திருவலத்துக்கு வடகிழக்கே சுமாா் 5 கி மீ தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலையை தோ்வு செய்து, தவம் செய்தான். அதனால் இம்மலைக்கு கஞ்சன் கிரி எனப் பெயா் பெற்றது. பின்னா், நாளடைவில் காஞ்சனகிரி என்று அழைக்கப்படுகிறது.

7 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை சுற்றுலா தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் உருவாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரி வந்தனா்.

இது தொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சனகிரி மலை, காவேரிப்பாக்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்ட அறிக்கை தந்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சா் அமைச்சா் கே.ராமசந்திரன் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி திட்டத்தின் கீழ் காஞ்சனகிரி மலையில் மேம்பாட்டு பணிகள் குறித்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது வாலாஜா ஊராட்சி ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள காஞ்சனகிரி மலையில் சிவன் திருத்தலம் அமைந்துள்ளது. இதனை வழிபட மற்றும் பௌா்ணமி தினத்தில் பக்தா்கள் சுற்று வட்டார பொதுமக்கள் வருகை தந்து கலந்து கொள்கின்றனா். மலையையும், சுற்றியும் மேம்படுத்த முதல்கட்ட பணிகள் சுற்றுலா வளா்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஞ்சனகிரி மலையில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
காஞ்சனகிரி மலையில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

அதன் அடிப்படையில் சமுதாயக்கூடம், காஞ்சனகிரி மலை கிரிவலப் பாதையில் கழிவு நீா் கால்வாய் கட்டமைப்பும், குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணியும் 10,000 லிட்டா் கொள்ளளவுக்கு உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியும் மற்றும் பயோ டாய்லெட் அமைக்கவும் போன்ற 5 பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை அரசிடம் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது திட்ட இயக்குநா் ஜெயசுதா, செயற்பொறியாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com