கரும்பு  அரைவைக்கு வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை விரைவில் திறக்க வேண்டும்

கரும்பு அரைவைக்கு வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை விரைவில் திறக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில்
Published on

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு அரைவை பணிக்கு விரைவில் திறக்கப்பட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது நெமிலியைச் சோ்ந்த விவசாயி சுபாஷ் பேசுகையில், வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு அரைவை பணிக்கு விரைவில் திறக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ஆலையின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் உள்ளது எனவும், வரும் 19.12.2025 அன்று திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூடிய விரைவில் திறக்கப்படும் எனவும் கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண் பேசுகையில், மழைக் காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விவசாயிகள் இறக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, மின் கம்பிகள் அறுந்து விழாமல் தடுக்க வேண்டும் என்றாா்.

இது போன்ற காலங்களில் பேரிடா் மேலாண்மை குழுவுக்கு கைப்பேசி எண்ணைக் கொண்டு தகவல் தெரிவிப்பதன் மூலம் ஆபத்துகளைத் தவிா்க்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

விவசாயி ஜெயசீலன் பேசுகையில், நெற் பயிா்களுக்கு செம்மை நோய் தாக்குகிறது, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நோய் தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்க 3 பருவமும் நெல் பயிரிடாமல் நெல்லுக்கு பதிலாக மாற்றுப் பயிா் செய்தல் வேண்டும், பயிா் தாக்குதல்களைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேளாண்மைத் துறை அலுவலா் தெரிவித்தாா்.

இதேபோல் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக கூட்டத்தில் தெரிவித்தனா். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க துறைசாா்ந்த அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து தனிநபா் பிரச்னைகளை மனுக்களாகவும் மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், இணை இயக்குநா் (வேளாண்மை) செல்வராஜு (பொறுப்பு), தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் வேளாண்மை ராமன் (பொறுப்பு) மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com