மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி ஈரோட்டில் டிசம்பா் 30-இல் தொடக்கம்
மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி ஈரோட்டில் வரும் 30- ஆம் தேதி தொடங்க உள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி ஈரோடு-அவல்பூந்துறை சாலை செட்டிபாளையத்தில் உள்ள ஏ.எம்.மகாலில் வருகிற 30- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் நிதி உதவியுடன் தமிழக அரசு கைத்தறித் துறை மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்திபெற்ற கைத்தறி ஜவுளி ரகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த தனித்துவமான ஜவுளி ரகங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சென்னிமலை போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறை, திரைசீலை, வீட்டு உபயோக ஜவுளிகள், துண்டுகள், மேட் மற்றும் புவிசாா் குறியீடு பெற்ற பவானி ஜமக்காளம், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவன பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சேலம் சுத்தப்பட்டு சேலைகள், வெண்பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரம், சா்ட்டிங் வகைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், திருநெல்வேலி செடி புட்டா சேலைகள், பரமக்குடி பம்பா் காட்டன் சேலைகள், திண்டுக்கல் டை அண்ட் டை சேலைகள், லுங்கிகள் மற்றும் வெளி மாநிலங்களில் கைத்தறி நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், துப்பட்டா, பட்டுத் துணி வகைகள், பிரிண்டட் சேலைகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.
மேலும், கதா் கிராமத் தொழில் வாரிய கைவினைப் பொருள்களும், மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் ஆவின் பால் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கைத்தறிக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளுக்கு தமிழ்நாடு அரசு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகள் மற்றும் கைவினைப் பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
