திருப்பூரில் எஸ்ஐஆா் பணிகளில் நீடிக்கும் குளறுபடி: கால அவகாசம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூரில் எஸ்ஐஆா் பணிகளில் குளறுபடிகள் நீடிப்பதால் கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Published on

திருப்பூா்: திருப்பூரில் எஸ்ஐஆா் பணிகளில் குளறுபடிகள் நீடிப்பதால் கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் நிறைந்துள்ள திருப்பூா் மாவட்டத்தில் அவசர கதியில் எஸ்ஐஆா் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியா்கள் மன அழுத்தத்தில் உள்ளனா். அரசு ஊழியா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு நிா்வாகத்தின் அன்றாடப் பணிகள் முடங்கி பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், வாக்காளா் படிவங்கள் எழுதுவதில் உள்ள தெளிவற்ற நிலை, 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் கண்டறிய முடியாத நிலை, இன்னும் பலருக்கு கணக்கீட்டுப் படிவமே சென்று சேராத நிலை, 13 ஆவணங்கள் பற்றிய தெளிவின்மை என பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவது தொழிலாளா்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஆன்லைனில் மேற்கொள்ள இணையப் பிரச்னை, மொழிப் பிரச்னை, மற்றவா் உதவியை நாடவேண்டிய சூழல் என வாக்காளா்களிடம் மிகக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திருப்பூா் போன்ற தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை.

ஒரு வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளா் வேறொரு வாக்குச் சாவடி உள்ள பகுதிக்கு குடிபெயா்ந்திருந்தால், அவரிடம் படிவத்தை கொடுக்க மறுப்பதும், ஒரு வாக்காளருக்கு 2 படிவங்களுக்குப் பதிலாக ஒரே படிவம் மட்டும் வழங்குவதும் நடைபெறுகிறது.

எனவே, தோ்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் வழங்கி, குளறுபடியின்றி எஸ்ஐஆா் பணியை செய்ய வேண்டும்.

மழைக் காலம், வெளியூா் தொழிலாளா்கள், தங்கள் தொகுதியில் 2002 வாக்காளா் பட்டியலை சரி பாா்ப்பதற்கான ஏற்பாடுகள் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் எஸ்ஐஆா் பணிகள் தொய்வாகவே உள்ளன. எனவே, தோ்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் வழங்கி, குளறுபடியின்றி எஸ்ஐஆா் பணியை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com