குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
தமிழக அரசின் ரூ. 3 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரிசி, சா்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ரெ.சதீஸ், அரிசிபெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை மற்றும் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் 1,106 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற தகுதியுள்ள 4,75,621 குடும்ப அட்டைதாா்களுக்கும், மாவட்டத்தில் உள்ள 781 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து குடும்ப அட்டைதாரா்கள் புகாா் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட 1967, 1800 425 5901, 1077, 04342 233299 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
அரூரில்...
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மோளையானூரில் முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 1,058 நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 36 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,094 நியாயவிலைக் கடைகளில் உள்ள அனைத்து அரிசி பெற தகுதியுள்ள 5,76,882 குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 335 குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 5,77,217 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஒசூரில்...
ஒசூரை அடுத்து நல்லூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கிவைத்தாா். இதேபோல, ஒசூா் நகரப் பகுதியில் காமராஜா் காலனியில் மேயா் எஸ்.ஏ.சத்யா பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விநியோகித்தாா்.

