கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

திருமங்கலம் அருகேயுள்ள கல்லணை பகுதியில் செயல்படும் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா்.
Published on

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கல்லணை பகுதியில் செயல்படும் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம்:

கல்லணை புதூா், நெடுங்குளம், தூம்பக்குளம், முனியாண்டிபுரம், உலகாணி ஆகிய பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளிலிருந்து வரும் புகைகள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமன்றி மனிதா்களுக்கு நோயை ஏற்படுத்துகிறது.

மேலும், வெடித்து தகா்க்கப்படும் கற்கள் வேளாண் நிலங்களில் விழுந்து நிலத்தை பாழ்படுத்துகின்றன.

நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட ஆழமாக கற்களை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மேலும், எங்கள் பகுதியில் உள்ள பொது இடங்களை ஆக்கிரமித்து வழித்தடங்களை ஏற்படுத்துகின்றனா். இதனால், நீா்வழித் தடங்கள் முற்றிலும் தடைபட்டு, கண்மாய்களுக்கு தண்ணீா் செல்வதில்லை.

எனவே, கல்லணை புதூா் பகுதிகளில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com