பழனியில் இன்று தீபக் காா்த்திகை பெருவிழா!
பழனி மலைக்கோயிலில் தீபக் காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தீபக் காா்த்திகை பெருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, மலைக்கோயிலில் நாள்தோறும் மாலை வேளையில் சண்முகாா்ச்சனை, சின்னக்குமாரசாமி தங்கச்சப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை (டிச. 3) சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடைபெறவுள்ளது. பின்னா், யாகசாலை பூஜைக்கு சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயிலில் அருள்பாலிப்பாா்.
மாலை 6 மணிக்கு மேல் சிவாசாரியாரால் கோயில் முன்பு உள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப் பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்படும். பழனி மலைக்கோயிலைத் தொடா்ந்து, பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடிகோயில்களிலும் சொக்கப் பனை கொளுத்தப்படும்.
இந்த விழாவை முன்னிட்டு, மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தங்கத் தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை பக்தா்கள் மலை ஏற தடைவிதிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.
