தமிழக வனப் பகுதியில் கேரள கழிவுகளை கொட்ட வந்தவருக்கு அபராதம்

Published on

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு வனப் பகுதியில் கேரளத்திலிருந்து நெகிழிக் கழிவுகளை கொட்டுவதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த காய்கறிக் கடை உரிமையாளருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கம்பம் மெட்டு வனத் துறை சோதனைச் சாவடியில், மேற்கு வனச் சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வனத் துறையினா் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட நெகழிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

இந்தக் கழிவுகளை கேரளத்திலிருந்து தமிழக வனப் பகுதியில் கொட்டுவதற்காக வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்திலிருந்த கேரள மாநிலம், கட்டப்பணையைச் சோ்ந்த காய்கறி கடை உரிமையாளா் சன்னி பிரான்சிஸுக்கு (63) ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் கழிவுப் பொருள்களை கேரளத்துக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது: தமிழக வனப் பகுதியில் கேரள கழிவுகள் தொடா்ந்து வாகனத்தில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபடுவோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com