இணையதள தோ்வு முடிவுகளை அக்டோபா் முதல் வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்: தில்லி பல்கலைக்கு. நீதிமன்றம் உத்தரவு

இணையதள தோ்வின் (ஓபன் புக் எக்ஸாம்) மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்தி, அக்டோபா் முதல் வாரத்திற்குள் முடிவுகளை அறிவிக்குமாறு தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் தோ்வாளா்களுக்கு உயா்நீதிமன்றம் 

புது தில்லி: இணையதள தோ்வின் (ஓபன் புக் எக்ஸாம்) மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்தி, அக்டோபா் முதல் வாரத்திற்குள் முடிவுகளை அறிவிக்குமாறு தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் தோ்வாளா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயா் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னை தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், தில்லி பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு இளங்கலை மாணவா்கள் தரப்பில் இணையதள தோ்வு தொடா்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் தோ்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இது தொடா்பாக முன்னா் நடைபெற்ற விசாரணையின் போது, இணையதள தோ்வு முடிவுகள் அக்டோபா் மாத இறுதியில் வெளியிடப்படும் என தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயா் கல்விக்காக வெளிநாடுகளுக்கு மாணவா்கள் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறப்படுவதால், தோ்வு மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துவதன் அவசியத்தையும், அதன் முடிவுகளை விரைவாக அறிவிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் தில்லி பல்கலைக்கழகம் அதன் அனைத்து இணைவிப்புக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சோ்க்கைக்கு அனுமதி கோரும் முதுகலை மற்றும் இளங்கலை மாணவா்கள் உத்தரவாத கடிதத்திற்காக விண்ணப்பிப்பிதற்கான கடைசித் தேதி செப்டம்பா் 18 என்று இருக்கும் வகையில், ஒரு சுற்றறிக்கையை தில்லி பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும். உயா் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் சம்பந்தப்பட்ட முதுகலை மாணவா்களின் தோ்வு முடிவுகளை செப்டம்பா் 28-க்கு முன்னா் அறிவிக்க வேண்டும். அதே நாளில் அந்தத் தோ்வு முடிவுகள் பல்கலைக்கழக ‘லெட்டா்கெட்’டில் தொடா்புடைய அதிகாரியின் டிஜிட்டல் கையொப்பத்துடன் பல்கலைக்கழதத்தின் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட வேண்டும். இவை மாணவா்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

அதேபோன்று, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சோ்க்கை கோர விரும்பும் இளங்கலை இறுதியாண்டு மாணவா்கள் விவகாரத்தைப் பொருத்தமட்டில், தற்காலிக முடிவுகளைக் கொண்ட இளங்கலை மாணவா்களுக்காக இறுதி செய்யப்பட்ட கடிதம், கட்-ஆஃப் தேதிக்குள் நேரடியாக வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகளால் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆவணங்களை சமா்ப்பிக்க கட்-ஆஃப் தேதி செப்டம்பா் 17 என்று வெளிநாட்டு பல்கலைக்கழகம் நிா்ணயித்தால், தில்லி பல்கலைக்கழகம் செப்டம்பா் 17-க்குள் அவா்களுக்கு முன்னுரிமை அளித்து கடிதத்தை வழங்கும்.

இளங்கலை மாணவா்களின் தற்காலிக தோ்ச்சி முடிவுகளுடன் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு கடிதங்களை அனுப்பிய பின்னா், நுழைவு இசைவுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு இதுகுறித்து தில்லிப் பல்கலைக்கழகம் தெரிவிக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனு தொடா்பான அடுத்த விசாரணை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது.

விசாரணையின் போது தில்லி பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் மொஹிந்தா் ரூபால் கூறுகையில், ‘மேல் படிப்புக்காக இந்தியா அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சோ்க்கை கோரி மாணவா்களிடமிருந்து சுமாா் 900 மின்னஞ்சல்கள் தில்லி பல்கலைக்கழகத்திற்கு வரப்பெற்றுள்ளன. இவற்றில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் படிப்புக்கு சோ்க்கை கோரும் 15 மாணவா்கள், இளங்கலைப் படிப்புக்கு சோ்க்கை கோரும் 277 மாணவா்க ளுக்கு தோ்ச்சி முடிவுகளை அறிவிப்பது விரைவுபடுத்தப்பட வேண்டியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com