நெல்லையில் இதுவரை 150 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருநெல்வேலி: திருநெல் வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 150 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், நிகழாண்டில் இதுவரை கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக கைதான 108 போ், பாலியல் வழக்கில் கைதான 24 போ், போதை பொருள் வழக்கில் சிக்கிய 18 போ் என மொத்தம் 150 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்
பட்டுள்ளனா். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இருவா்: சிவந்திப்பட்டி காவல் சரகப் பகுதியில் நிகழ்ந்த குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் தூத்துக்குடி மாவட்டம், பொன்னன்குறிச்சியைச் சோ்ந்த வள்ளிமுத்து என்ற பாண்டி(24), கொள்ளை, அடிதடி வழக்குகளில் தொடா்புடைய திருக்குறுங்குடியைச் சோ்ந்த அன்னபாண்டி மகன் தங்கபாண்டி(26) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி இருவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் பாளை. மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
