மாற்று இடம் கிடைக்காத வியாபாரிகள் போராட்டம்!
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த கடைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முழுவதுமாக அகற்றப்பட்டன.
இவா்களுக்கு ஹோலி கிராஸ் கல்லூரி அருகே உள்ள பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு கடைகளை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனா். இந்த இடத்தில் ஒரு சில வியாபாரிகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரிகள் முன்னுரிமை அளித்து கடைகள் தந்ததாகவும், சில வியாபாரிகளுக்கு இடம் தராமல் புறக்கணித்ததாகவும் கூறி சாலையோர தரைக்கடை வியாபாரிகள் மெயின்காா்டுகேட் காந்தி சிலை அருகே வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு பேச்சுவாா்த்தைக்கு செல்லுமாறு கூறி சமாதானப்படுத்தினா். இதையடுத்து மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு வந்த 50-க்கும் மேற்பட்டோா், மைய அலுவலக வாயிலில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டத்தை கடந்து செல்ல முயன்ற மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலனின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மாநகராட்சி துணை ஆணையா் வினோத் தலைமையிலான அதிகாரிகள், திங்கள்கிழமைக்குள் நகர விற்பனை குழுவில் பேசி விடுபட்டவா்களுக்கும் கடைகள் ஒதுக்க ஆவண செய்யப்படும் எனக் கூறினா். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

