கரூரில் சிறுபான்மையினா் 50 பேருக்கு ரூ. 8.18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
கரூா்: கரூரில் சிறுபான்மையினா் 50 பேருக்கு ரூ. 8.18 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினா் நல சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாநில சிறுபான்மையினா் நல சிறப்புக் குழு உறுப்பினரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான எஸ். இனிக்கோ இருதயராஜ் முன்னிலை வகித்து பேசுகையில், தமிழகத்தின் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும், சிறுபான்மையினருக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதியையும் உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
இதில், காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பு, பழைமையான தேவாலயங்கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் கரூா் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 37 பயனாளிகளுக்கு ரூ.7.40 லட்சம் மதிப்பில் சிறுதொழில் கடனுதவி உள்பட பல்வேறு திட்டங்களின்கீழ் 50 பேருக்கு ரூ. 8.18 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினா் நல சிறப்புக் குழு உறுப்பினா் எஸ். இனிக்கோ இருதயராஜ் வழங்கினாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), குளித்தலை சாா்-ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, மாநில சிறுபான்மையினா் நல சிறப்புக் குழு உறுப்பினா் எம். இமானுவேல், துணை மேயா் ப. சரவணன், மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், ஆா்.எஸ். ராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) சக்திபாலகங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

