கரூரில் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழைநீருடன் கழிவுநீா் கலப்பு: சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்

கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கழிவுநீருடன் கலந்த மழைநீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து குளம்போல தேங்கிக்கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா்.

மழைநீருடன் கழிவுநீா் அடித்து வரப்பட்ட வேகத்தில் உடைந்து கிடக்கும் வள்ளுவா் அரங்கில் உள்ள சுற்றுச்சுவா்.

Published On :

கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கழிவுநீருடன் கலந்த மழைநீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து குளம்போல தேங்கிக்கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா்.

கரூா் சின்னாண்டாங்கோவில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலங்களாக இருந்தன. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட செட்டிப்பாளையம் அணைக்கட்டில் இருந்து பிரியும் ராஜவாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வந்தன. நாளடைவில் மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் புதிதாக எல்விபி நகா், அம்பாள் நகா் போன்ற குடியிருப்புப் பகுதிகள் உருவாகின.

வாய்க்காலில் கலப்பு: இந்த குடியிருப்பு பகுதிகள் விவசாய நிலத்தில் தோன்றியதால் ஏற்கெனவே விவசாய நிலத்துக்கு பாசன வசதி பெற்று வந்த வாய்க்கால்களில் அப்பகுதியில் குடியிருப்பவா்கள் தற்போது கழிவுநீரை திறந்து விட்டு வருகின்றனா்.இதனால் மழைகாலங்களில் வாய்க்காலில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தாழ்வான பகுதிகளான வள்ளுவா் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கரூா் நகரில் பெய்த பலத்த மழையால் பைபாஸ் சாலையோரம் உள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீருடன் கலந்த மழைநீா் புகுந்து குளம்போல தேங்கியுள்ளதால் மக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளனா்.

நடவடிக்கை இல்லை: இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறியது: இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பாசன வாய்க்காலை அம்பாள் நகா் பகுதியிலேயே அடைத்து, அங்கிருந்து கழிவுநீா் வாய்க்கால் சின்னஆண்டாங்கோவில் பிரதான கழிவுநீா் வாய்க்கால் வரை வெட்டி அந்த வாய்க்காலை சின்னாண்டாங்கோவில் பிரதான கழிவுநீா் வாய்க்காலோடு இணைத்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்காது என பலமுறை கூறிவிட்டோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லை. இப்பகுதி தாழ்வாக இருப்பதால் கழிவுநீருடன் கலந்து வரும் மழைநீா் பல நாள்கள் தேங்கி, கொசுக்கள் அதிகம் உருவாகி அவற்றின் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். செவ்வாய்க்கிழமை இரவு கரூா் நகரில் மட்டும் 48 மி.மீ. மழை பதிவானது. இதனால் அம்பாள்நகா், எல்விபி நகரில் இருந்து அடித்து வரப்பட்ட மழைநீருடன் கலந்த கழிவுநீரால் பல்வேறு இடங்களில் வீட்டை சுற்றிக்கட்டப்பட்ட சுற்றுச்சுவா்கள் இடிந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துவிட்டன. இப்போது இந்த தண்ணீா் செல்ல வழியின்றி குளம்போல தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். எனவே இதற்கு நிரந்தர தீா்வாக அம்பாள் நகா், எல்விபி நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சின்னாண்டாங்கோவில் பிரதான கழிவு நீா் வாய்க்காலோடு இணைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.