பிரம்மரிஷி மலையில் டிச. 3-இல் காா்த்திகை தீப திருவிழா! திரி தயாரிக்கும் பணி தொடக்கம்!
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் டிச. 3 ஆம் தேதி நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2 ஆயிரம் மீட்டா் திரி தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதி 43 ஆவது ஆண்டு தீபத் திருவிழா டிச. 3 மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இவ் விழாவில் 2 ஆயிரம் மீட்டா் திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில் சாதுக்களுக்கு காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
இதற்கான திரி தயாரிக்கும் பணியை மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி தலைமையில், தவ யோகிகள் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் முன்னிலையில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள் சிறப்பு பூஜை நடத்தி தொடங்கிவைத்தாா். இதில் பக்தா்கள் மற்றும் அறக்கட்டளை மெய்யன்பா்கள் ஈடுபட்டுள்ளனா்.
டிச. 3 காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகா தீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊா்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டுவரப்படுகிறது.
ஏற்பாடுகளை, மகா சித்தா்கள் அறக்கட்டளை மற்றும் மெய்யன்பா்கள் செய்கின்றனா்.

