பொன்னமராவதி பேரூராட்சி குப்பைகளை தூத்தூர் மலை அடிவாரத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு நடைபெற்ற பணியை தடுத்து, ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பொன்னமராவதி பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் நகரின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தொற்றுநோய் பரவலாம் என அச்சப்பட்ட மக்கள், குப்பைகளை நகரின் வெளியே கொண்டுசென்று கொட்ட வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பேரூராட்சி சார்பில் தூத்தூர் மலை அடிவாரத்தில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சரிசெய்யும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
அப்போது அங்கு வந்த தூத்தூர், ஆலவயல் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் குப்பைகளை அங்கு கொட்டினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி, ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
அதேபோல, வனத் துறை அதிகாரிகளும், குப்பைகளை கொட்ட பேரூராட்சி தங்களிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறி பணியை நிறுத்துமாறு கூறினர்.
இதையடுத்து, அங்கு வந்த வட்டாட்சியர் வி. ரவி, இதுகுறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறியதையடுத்து, மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து தூத்தூர் ஊராட்சித் தலைவர் அழ. பழனிச்சாமி கூறியது: இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டினால் சுற்றுச்சூழல் மாசுபடும். விவசாயம் பாதிக்கப்படும். இதுகுறித்து முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு முன்பே மனு அளித்துள்ளோம். எனவே, மக்கள் நலன் கருதி இங்கு குப்பைகளைக் கொட்டக் கூடாது என்றார். பேரூராட்சி செயல் அலுவலர் வ. சுலைமான் சேட் கூறியது:
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தூத்தூர் மலை அடிவாரத்தில் ரூ. 40 லட்சத்தில் உரப்பூங்கா அமைக்க திட்டமிட்டு பணியை தொடங்கினோம்.பேரூராட்சி குப்பைகள் அங்கு கட்டப்படவுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு மக்கவைத்து உரமாக்கப்படும். மேலும், இந்தப் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும். குப்பைகள் எரியூட்டப்பட மாட்டாது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுள்ளோம். எனவே, விவசாயிகளின் நலனுக்கான திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.