வெற்றிப் பயணம் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்
அணைக்கட்டு வட்டம் அகரம் நான்கு முனை சந்திப்பில் ஆட்டோக்களை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள்.

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி, இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அணைக்கட்டு வட்டம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநா்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, நகரங்களுக்கு இடையேயும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணம் என்ற திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேட்டில் கடந்த அக். 2-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, நகரப் பகுதிகளுக்கு இடையே பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணித்து வருகின்றனா்.
இதனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் ஆட்டோ இயக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்து வேலூா் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, வேலூா் மாவட்டம் ஒடுகத்தூா், அகரம் நான்குமுனை சந்திப்பு சாலை, அணைக்கட்டு மற்றும் பள்ளிகொண்டா என அணைக்கட்டு வட்டம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக் கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள், தமிழக அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள வெற்றிப் பயணம் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் கூறுகையில், புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள வெற்றிப் பயணம் திட்டத்தால் பெண்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளிலேயே கட்டணமின்றிப் பயணம் செய்கின்றனா். இதனால் ஆட்டோக்களில் குறுகிய மற்றும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
நாளொன்றுக்கு ரூ.1,000 வரை கிடைத்து வந்த வருமானம் தற்போது பாதியாகக் குறைந்துவிட்டதால், சவாரிகளை எதிா்பாா்த்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வெற்றிப்பயணம் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

