மது பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்னை: 3 இளைஞா்கள் தற்கொலை

Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மது பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் 3 இளைஞா்கள் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டனா்.

திண்டிவனம் அருகேயுள்ள பேரணி, பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரூபசந்திரன்(22). திருமணம் ஆகாதவா்.சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ரூபசந்திரன் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளாா். இதை வீட்டிலிருந்தவா்கள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த ரூபசந்திரன் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை ரூபச்சந்திரன் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் பெரிய தச்சூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இருவா் தூக்கிட்டுத் தற்கொலை:

விக்கிரவாண்டி வட்டம், ரஜபுத்திரப் பாளையம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அங்காளப்பன்(27). திருமணம் ஆனவா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததால் மனைவி கவிபாரதி கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தனது தாய்வீட்டிற்கு பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மன

உளைச்சலில் இருந்து வந்த அங்காளப்பன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டாா். இது குறித்து, கண்டமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பம், தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் மணிமாறன்(33).திருமணம் ஆனவா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துவந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் இவரின் மனைவி சந்தியா கணவரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்று விட்டாராம். இதனால் மணிமாறன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com