பெங்களூரு

மக்கள் நாயகன் பங்காரப்பா

கர்நாடக அரசியலில் நீங்கா இடம்பிடித்திருக்கும் எஸ். பங்காரப்பா என்கிற சாரேகொப்பா பங்காரப்பா, ஷிமோகா மாவட்டம், சொரபா தாலுகா, குபடூர் கிராமத்தில் கல்லப்பா-கல்லம்மா தம்பதியருக்கு 1932 அக்டோபர் 26-ம் தேதி

ந.முத்துமணி

கர்நாடக அரசியலில் நீங்கா இடம்பிடித்திருக்கும் எஸ். பங்காரப்பா என்கிற சாரேகொப்பா பங்காரப்பா, ஷிமோகா மாவட்டம், சொரபா தாலுகா, குபடூர் கிராமத்தில் கல்லப்பா-கல்லம்மா தம்பதியருக்கு 1932 அக்டோபர் 26-ம் தேதி பிறந்தவர்.

ஆரம்பக் கல்வியை சொரபாவில் கற்ற பங்காரப்பா, பி.ஏ.,எல்.எல்.பி. பட்டப் படிப்பை மைசூரில் கற்றார். 1958 ஜனவரி 1-ம் தேதி சகுந்தலாவைத் திருமணம் செய்த பங்காரப்பாவுக்கு மகன்கள் குமார் பங்காரப்பா, மது பங்காரப்பா, மகள்கள் சுஜாதா, கீதா, அனிதா இருக்கின்றனர்.

அரசியல் வாழ்க்கை: 1967ம் ஆண்டு அரசியலில் கால் பதித்த பங்காரப்பா, பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக வளர்ந்தார். அதே ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சொரபா தொகுதியில் இருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் இருந்து 1996-ம் ஆண்டு வரை, தொடர்ந்து 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரது 44 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பாஜக, மஜத கட்சிகளில் பணியாற்றியுள்ளார். கர்நாடக கிராந்தி பக்ஷô, கர்நாடக விகாஸ் பக்ஷô மற்றும் கர்நாடக காங்கிரஸ் பார்ட்டி என்ற பெயரில் தனிக் கட்சிகளையும் நடத்தினார்.

1983-ம் ஆண்டில் கர்நாடகத்தில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவியதில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு. அப்போது புரட்சிக் கூட்டணி என்ற பெயரில் அணி அமைத்து ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா ஆட்சிக்கு ஆதரவு அளித்தார்.

1977-78 ஆம் ஆண்டில் தேவராஜ் அர்ஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1978-79ல் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 1980-81ல் வருவாய் மற்றும் வேளாண்துறை அமைச்சராகவும், 1989-90ல் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார்.

இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட அவர், 1979-80களில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 1985-87ம் ஆண்டுகளில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

1990-ம் ஆண்டு, அன்றைய கர்நாடக முதல்வர் வீரேந்திர பாட்டீலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராஜீவ்காந்தியால் முதல்வராக நியமிக்கப்பட்டார் பங்காரப்பா. 1990 அக்டோபர் 17-ம் தேதி முதல் 1992 நவ. 19-ம் தேதி வரை அவர் முதல்வராகப் பதவு வகித்தார்.

1996-ல் ஷிமோகா தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 1999 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.

ஆனால் அதன்பின் அவரது அரசியல் வாழ்க்கை சிறப்பாக இல்லை. 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பாவுக்கு எதிராகப் போட்டியிட்ட அவர் முதன்முறையாகத் தோல்வியைத் தழுவினார். பின்னர் 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவிடம் தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் தன்னை சரியாக அங்கீகரிக்காதபோதெல்லாம் புதிய கட்சிகளைத் தொடங்கி தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்தார் பங்காரப்பா. அதில் பெரிதாக எதையும் சாதிக்காத அவர், வேறு கட்சிகளுக்கு தாவுவதில் ஒரு சாதனையையே படைத்தார் எனலாம். தென் மாநிலங்களில் பெரிய செல்வாக்கு எதுவுமற்ற சமாஜவாதி கட்சியிலும் கூட அவர் செயல்பட்டுள்ளார். தேசிய அரசியலில் அழுத்தமாகத் தடம் பதிக்க வேண்டும் என்ற அவரது ஆசை இறுதிவரை நிறைவேறவில்லை.

2009-ல் மீண்டும் காங்கிரஸýக்கு வந்த அவர், காங்கிரசில் எதுவும் சரியில்லை என்று கூறி, 2011-ம் ஆண்டு ஜனவரியில் மஜதவில் இணைந்தார்.

குமாரசாமியை முதல்வராக்குவதே தனது விருப்பம் என்று கூறிவந்தார்.

44 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் அமைச்சர், முதல்வர் பதவிகளை வகித்தது வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்தில் தீவிரப் பங்காற்றியதால், மக்கள் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT