பெங்களூர், ஜூன் 4: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் புதிய அரசியல் வியூகத்தால், சட்டமேலவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியில் சதானந்த கெüடா நீடிப்பாரா என்று கர்நாடக அரசியல் அரங்கில் சூடாக விவாதம் நடைபெற்று வருகிறது.
தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அமைந்ததே என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்த காலம்போய், இப்போது வேதனைப்படும் நிலை உருவாகியுள்ளது. 4 ஆண்டுகால ஆட்சியில் 2 முதல்வர்கள், முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், அதில் சிலருக்கு சிறைவாசம், ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை, வெள்ளம், வறட்சியைச் சமாளிக்க முடியாமல் திணறல், உள்கட்சிப் பூசல் போன்ற பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் பல முறை முயன்று தோற்றது, சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்தது, அரைநிர்வாணத்துடன் எம்.எல்.ஏ.க்கள் நடனம் போன்ற எதிர்பாராத பல சம்பவங்கள் என்று பாஜக ஆட்சியில் பரபரப்புக்கு குறைவில்லை.
மீண்டும் முதல்வராகும் கனவில் இருந்த எடியூரப்பாவின் கதவை சிபிஐ அடைத்துள்ள நிலையில், பாஜக மேலிடத் தலைவர்களின் ஆதரவுடன் அடுத்த ஓராண்டுகால ஆட்சியை நடத்தி முடிக்கும் தெம்பில் இருக்கிறார் சதானந்த கெüடா. அவரது கனவைக் கலைக்க எடியூரப்பா பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குத் தயாராகி வருகிறார். தன்னால் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டு, தனக்கு எதிராகச் செயல்படும் தனது அரசியல் எதிரிகளுடன் நட்பு பாராட்டும் சதானந்த கெüடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்காக கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெற முடியாத நிலையில், புதிய அரசியல் வியூகத்தைக் கையில் எடுக்கவிருக்கிறார் எடியூரப்பா. அதற்கான முதல்களமாக சட்டமேலவைத் தேர்தலை கருவியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
ஜூன் 10,11 ஆகிய தேதிகளில் 2 விதமாக நடைபெறும் சட்டமேலவைத் தேர்தல் முடிவுகள் சதானந்த கெüடாவுக்கு எதிரானதாக அமைய எடியூரப்பா திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிகிறது. சதானந்த கெüடா முதல்வரான பிறகு நடைபெற்ற பெல்லாரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், உடுப்பி - சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இதில் எடியூரப்பாவின் பங்கு இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் சந்தேகிக்கப்படுகிறது. அதேபோன்றதொரு நிலையை சட்டமேலவைத் தேர்தலில் உருவாக்க எடியூரப்பா ரகசிய வேலையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. லிங்காயத்து சமுதாய வாக்கு வங்கியைக் கையில் வைத்துகொண்டு அரசியல் நடத்தி வரும் எடியூரப்பா, சதானந்த கெüடாவின் அஸ்திரத்தையே அவருக்கு எதிராகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒக்கலிகர் மாநில மாநாட்டில் பேசிய முதல்வர் சதானந்த கெüடா, என்னுடைய ஒக்கலிகர் சமுதாயத்தின் ஆதரவை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். ஒக்கலிகர் சமுதாயத்தின் ஆதரவு இருந்ததால்தான் என்னால் முதல்வராக முடிந்தது என்று கூறியிருந்தார்.
பாஜகவால் முதல்வர் பதவியை அனுபவித்துக் கொண்டு, ஒக்கலிகர் சமுதாயமே காரணம் என்று சதானந்த கெüடா கூறியிருப்பதை அந்தக் கட்சியில் யாரும் ரசிக்கவில்லை. இதை சதானந்த கெüடாவுக்கு எதிராகப் பயன்படுத்த எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதவிர, சட்டமேலவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதையும் சதானந்த கெüடாவுக்கு எதிராகப் பயன்படுத்த எடியூரப்பா யோசித்து வருவதாகத் தெரிகிறது. கர்நாடக அரசியல் நிலையைக் கவனிக்கும் போது அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக அண்மையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எடியூரப்பா கூறியதை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
எடியூரப்பா திட்டப்படி, சதானந்த கெüடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டால், அடுத்ததாக லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கவும், ஷோபாகரந்தலஜேவை துணை முதல்வராக்கவும் எடியூரப்பா வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தனது செல்வாக்கை இழந்து நிற்கும் பாஜக, லிங்காயத்து சமுதாய வாக்குகளைப் பெறுவதற்காக எடியூரப்பாவின் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.