பெங்களூரு

ஆங்கிலேயர் காலத்திலேயே காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மோசடி: சித்தராமையா

தினமணி

ஆங்கிலேயர் காலத்திலேயே காவிரி விவகாரத்தில் மாநிலத்துக்கு மோசடி ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக்கிழமை பேராசிரியர் பி.வி.நஞ்சுண்டராஜ் அரஸ் எழுதிய நானும்-கண்ணம்பாடி அணையும்-என்றொரு ஆத்ம கதை புத்தகத்தை வெளியிட்டுப் பேசியது: ஆங்கிலேயர் நமது நாட்டை ஆண்ட போது, அன்றைய மதராஸ் பட்டணம் முக்கிய வர்த்தகத் தலமாக திகழ்ந்தது. இதனால் காவிரி நீரைப் பயன்படுத்தும் உரிமை தமிழகத்துக்கு அதிகம் வழங்கப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்க்கும் சக்தி மைசூரு மாகாணத்துக்கு இல்லாததால், இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை.

எனவே, ஆங்கிலேயரால் கர்நாடகத்துக்கு ஏற்பட்ட மோசடியைப் பொறுத்துக் கொண்டு, அவர்கள் ஆணையைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்கு உட்படுத்தப்பட்டோம். இதனால் 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களைப் பின்பற்றி தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கி வருகின்றோம். இந்தப் பிரச்னையை தீர்க்க மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தாலும், அதற்கான பலன் கிடைக்கவில்லை.

2007-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அது தொடர்பான வாதம், விவாதம் நடைபெற்று வருகிறது. இறுதித் தீர்ப்பும் மாநிலத்துக்கு எதிராக இருந்தது வேதனைக்குரியது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு குறித்து மாநிலத்தின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான தீர்ப்பில் வெற்றி பெறத் தேவையான சட்டப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

மைசூரு மாகாணத்தின் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன் பலனாக, கண்ணம்பாடி அணை, கன்னட சாகித்ய பரிஷத், மைசூரு நகரத்தை உருவாக்கினார். கண்ணம்பாடி அணையைக் கட்ட மன்னருக்கு விஷ்வேஸ்வரய்யா உறுதுணையாக இருந்தார். அதன் பயனாக தற்போது பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வயிறு நிரம்புகிறது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அணை நிரம்புவது குறைந்துள்ளது. மழைக்காக பூஜை செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இயற்கையின் மீது நம்பிக்கை உள்ளது. இயற்கைக்கு மாறாக யாரும் எதையும் செய்ய முடியாது. கடந்த நில நாள்களாக பருவ மழை பெய்து வருவதால், கண்ணம்பாடி அணை நிரம்பி, நீர் பங்கீட்டில் பிரச்னை இருக்காது என்று நம்புகிறேன் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா, மக்களவை உறுப்பினர் துருவநாராயணா, சுத்தூர் மடாதிபதி சிவராத்திதேசிகேந்திர சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT